ராமதாஸ் நன்றி மறப்பது நன்றன்று - துரைமுருகன்
சென்னை: அரசியலில் அணி மாறலாம். மனசாட்சி மாறாலாமா. வன்னிய சமுதாயத்திற்கு கலைஞர் செய்த சேவையை வன்னிய சமுதாயம் எப்போதும் நன்றியுடன் நினைவில் கொண்டிருக்கும். ஆனால் ராமதாஸ் நன்றி மறப்பது நன்றன்று என்று கூறியுள்ளார் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன்.
வன்னிய சமுதாயத்துக்காக முதல்வர் என்ன செய்தார் என்று கேட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்குப் பதிலளித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிலர் சிறப்பான இடத்தில் இடம் பிடித்திருப்பார்கள். அந்த இடத்தின் சிறப்புக்கு நாம்தான் காரணம் என்றும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களை அந்த இடத்தில் இருந்து நீக்கி விட்டப் பிறகும் அந்த சிறப்பான இடம் மேலும் சிறப்பாக விளங்குவது கண்டு நீக்கப்பட்டவர்களுக்கு கோபம் கொப்பளிக்கும்.
ஆத்திரம் அதிகமாகும். வாய் வேண்டாத வார்த்தைகளை கொட்டும். ஏன் வயிறும் எரியும். பிறகு என்ன இருந்த இடத்தை இல்லாததும் பொல்லாததும் பேசுவார்கள். இன்று அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அவர் வெளியிடுகிற அறிக்கைகளுக்கும் பேசுகின்ற பேச்சுகளுக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றாலும் ஒரு பொய்யை திருப்பி திருப்பிச் சொன்னால் அது மெய்யை போல தோன்றும் என்பார்கள். அந்த குழப்பத்திற்கு மக்கள் ஆளாக கூடாது என்பதால்தான் இந்த அறிக்கை.
அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நாம் கூறும் பதிலை எதிர்கொள்ள முடியாமல் வன்னிய சமுதாயத்திற்கு பின் நின்று கணை தொடுக்கப் பார்க்கிறார் டாக்டர் ராமதாஸ்.
மனசாட்சியுமா மாறி விடும் ..
வன்னிய சமுதாயத்திற்கு முதல்வர் கலைஞர் என்ன செய்துவிட்டார் என்ற கேள்வியை ராமதாஸ் கேட்டிருப்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அரசியலில் அணி மாறலாம். மனசாட்சி கூடவா மாறிவிடும்
வன்னியர் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம். அந்த சமுதாயத்தை போல பல சமுதாயம் இருக்கின்றன என்று எண்ணி அந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு அரசு மூலம் என்ன செய்யலாம் என்பதை கண்டறிய தமிழக வரலாற்றிலேயே பிறபடுத்தப்பட்டோர் நல கமிஷனை முதல்வர் கருணாநிதி அமைத்தார். அந்த கமிஷனுக்கு தலைவராக சட்டநாதன் என்ற வன்னியரைத்தானே நியமித்தார்.
வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான ராஜ்மோகனை டிஜிபியாக அமர்த்தியது, சேலம் வழக்கறிஞர் கே.எம்.நடராஜனை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து, குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராக அவரையே நியமித்திருப்பது, இன்றைய மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலுவை அன்று சர்வீஸ் கமிஷன் மெம்பராக்கியது,
அம்பாசங்கரை சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமனம் செய்தது, இன்றைய சர்வீஸ் கமிஷன் தலைவராக காசி விஸ்வநாதனை அமர வைத்திருப்பது, டாக்டர் ராமதாஸின் சிபாரிசை ஏற்று ராமசாமி என்பவரை சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமித்திருப்பது, தமிழ்நாடு தேர்தல் கமிஷன் தலைவராக சந்திரசேகரனை 2வது முறையாகவும் அந்த பதவியில் தொடரவிட்டிருப்பது, சேலம் பெரியார் பல்கலைகழகத்திற்கு தங்கராசுவை துணைவேந்தராக நியமனம் செய்திருப்பது,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் துணை வேந்தராக சபாபதி மோகனை நியமித்திருப்பது, சென்னையின் தற்போதைய கமிஷனராக சேகரை அமர வைத்திருப்பது. அமைச்சரவையில் மூன்று பேரை அமைச்சர்களாக நியமித்து அவர்களிடம் முக்கிய இலாகாக்களை ஒப்படைத்திருப்பது,
வன்னிய சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருப்பது இவைகள் அத்தனையையும் வன்னிய சமுதாயத்திற்கு செய்தவர் முதல்வர் கருணாநிதி அல்லவா. இல்லை என்று ராமதாஸால் மறுக்க முடியுமா?
அவ்வளவு ஏன்? பாமக, வன்னியர் சங்கமாக இருந்தபோது பல தோழர்கள் மீது அன்றைய ஜெயலலிதா அரசு வழக்கு தொடுத்தது. அதை எல்லாம் வாபஸ் வாங்கியவர் முதல்வர் கருணாநிதி தானே!
வன்னியர் சங்கம நடத்திய போராட்டத்தில் இறந்த தியாகிகள் 24 நபர்களுக்கு மாதம்தோறும் நிதியுதவி செய்வு வருவதும் முதல்வர் கருணாநிதிதானே!
நன்றி மறப்பது நன்று அன்று. டாக்டர் ராமதாஸ் வேண்டுமானால் மறக்கலாம். ஆனால் வன்னிய சமுதாயம் கலைஞர் நன்றியை ஒருநாளும் மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications