நான் கோப்புகளை ஓய்வெடுக்க விடுவதே இல்லை: கருணாநிதி

ஆவடி நகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி புதிய அலுவலக கட்டடம் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் 3,000 பேருக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆவடியில் நடந்தது.
திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் கருணாநிதி பேசுகையில், ஆவடி பகுதியில் ரூ.276.46 கோடி மதிப்பிட்டீல் 218 பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கை உள்ளது.
திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது. இடையில் வந்தவர்கள் இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றவில்லை. பின்னர், பொறுப்புக்கு வந்த ஸ்டாலின் இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கினார். அதற்கென்று தனி நிதியை உருவாக்கினார். திட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கும் பொறுப்பு உண்டு என்று பொறுப்புகளை பகிர்ந்தளித்தவர்.
இந்தியாவே பார்த்து வியப்படையும் வகையில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதற்காக ஸ்டாலினையும் பளுவை பகிர்ந்து கொண்ட மக்களையும் அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். இந்த நிலை இன்னும் 5 ஆண்டுகள் தொடருமானால் மேலே விமானத்தில் இருந்து பார்த்தால் இது தமிழ்நாடுதானா என்று ஐயப்பாடு நமக்கு தோன்றுகிற அளவுக்கு முற்போக்கு திட்டங்களை தமிழகத்திலே காண முடியும்
சத்துணவு வாழைப்பழம், முட்டை போன்றவற்றை மாணவர்களுக்கு தந்து அவர்களை எல்லாம் படிக்க வைக்கின்ற காரணத்தால் எதிர்கால இந்தியா கல்வியாளர்கள் நிறைந்த நாடாக மாற தமிழகத்திலே வழி செய்யப்பட்டிருக்கிறது.
ஆவடி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக மாற்ற சுதர்சனம் கோரிக்கை விடுத்தார். அது தொடர்பான கோப்பு வந்து இரண்டொரு நாளாக காத்துக் கிடக்கிறது.
லட்சிய கோப்புகள்:
என்னிடம் லட்சம் கோப்புகள் தேங்கிக் கிடப்பதாக யாரோ கூட சொன்னார்கள். என்னிடம் இருப்பது லட்ச கோப்புகள் அல்ல. லட்சிய கோப்புகள்தான். இந்த நாட்டு மக்களை முன்னேற்ற வேண்டும். இந்த நாட்டு மக்களுடைய வறுமையை போக்க வேண்டும். என்னிடம் வரும் கோப்புகளை ஒழுங்காக ஒவவொரு நாளும் பார்த்து பைசல் செய்கிறேன்.
1967 முதல் இன்று வரை கோப்புகளை அப்படித்தான் பார்க்கிறேன். நான் 5வது தடவை முதல்வரானபோது பழைய முதல்வரால் முடிச்சு அவிழ்க்காமலே பிரிக்கப்படாமலேயே எத்தனை முக்கிய கோப்புகள் இருந்தன. நான் எந்த கோப்புகளையும் ஓய்வெடுக்க விடுவதில்லை. ஓட ஓட விரட்டுகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications