திரை விழாக்களில் பங்கேற்பது பாவமா? - கருணாநிதி
சென்னை: திரைப்பட கலைவிழாக்களில் கலந்து கொள்வது பாவமான காரியமா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாிநிதி கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சினிமா விழாக்களில்தான் அதிகம் கலந்து கொள்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
இதற்கு கருணாநிதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் நீங்கள் திரைப்படத் துறைக்காக அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பிரசாரம் செய்து வருகிறார்களே?
பதில்: நான் ஏற்கனவே எழுதி புத்தகங்களாக வெளிவந்துள்ள கதைகளை கலைத் துறையைச் சேர்ந்த சிலர் திரைப்படங்களாக எடுக்க அனுமதி கேட்கின்றனர். அந்த கதைக்காக திரைக்கதை, உரையாடல் போன்றவற்றை அவர்களே எழுதிக் கொண்டு கதையை மட்டும் திரைப்படம் எடுக்கின்ற உரிமையை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அந்த முறையில் நான் எதிர்கட்சி தலைவராக இருந்துபோது மண்ணின் மைந்தன், கண்ணம்மா ஆகிய படங்களுக்கான உரிமையை வழங்கினேன். அதற்காக வழங்கப்பட்ட ரூ.21 லட்சத்தை சுனாமி நிவாரண பணிகளுக்காக அப்போதைய அரசுக்கு வழங்கி விட்டேன். இது பத்திரிகைகளிலும் வெளிவந்தது.
தற்போது வெளிவந்துள்ள உளியின் ஓசை திரைப்படத்திற்காக தொடக்கம் முதல் இறுதி வரையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு முரசொலியில் நான் தொடர்கதையாக எழுதி வெளிவந்த சாரபள்ளம் சாமுண்டி என்ற சரித்திரக் கதையை ஜெ.நந்தினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் ரூ.25 லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.
அந்த பணத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணனிடம் கொடுத்து, திரைத்துறையில் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேன். இந்த ரூ.25 லட்சத்துக்கான வருமான வரியாக ரூ.7 லட்சமும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே எழுதி புத்தக வடிவில் வந்துள்ள கதைகளைக் கூட வேறு சிலர் படங்களை தயாரிப்பதற்காக என்னிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான விலையை பெற்றாலும் கூட அதை என்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக நான் எடுத்துக் கொள்வதாக இல்லை. இப்போது அளித்ததை போல மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற வகையில்தான் அதுவும் அளிக்கப்படும்.
கேள்வி: கலைத்துறை விழாக்களில் காலத்தை வீணடிப்பதாக டாக்டர் ராமதாஸ் புகார் சொல்கிறாரே?
பதில்: பாமக திமுகவோடு உறவு கொண்டிருந்தபோது திமுக சார்பிலும், பாமக சார்பிலும் அரசு சார்பிலும் நடைபெற்ற விழாக்களில் நான் கலந்து கொண்டதால் எப்படி காலம் வீண் அடிக்கப்படவில்லையோ அதேபோல இப்போதும் காலம் வீண் அடிக்கப்படவில்லை.
கேள்வி: திரைத்துறை தொடர்பான விழாக்களில் முதல்வர் அதிகமாக பங்கேற்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதே?
பதில்: திரைப்பட நிகழ்ச்சிகளிலே, கலை விழாக்களிலே கலந்து கொள்வது என்பது பாபகரமான காரியமா? அதை தவிர வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்விதில்லையா? இப்போதுதானே இரண்டு தென் மாவட்டங்களுக்குச் சென்று தூத்துக்குடி மாநகராட்சி நிகழ்ச்சியிலும், மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சிலை திறப்பு விழா, டி.எம்.சௌந்தரராஜன் பாராட்டு விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்துள்ளேன்.
பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளர் தயாரித்து ராமதாஸே சில காட்சிகளில் தோன்றிய இலக்கணம் திரைப்படத்தை பார்க்க ராமதாஸும் அந்த படத்தின் தயாரிப்பாளரும் என்னை வலிந்து வலிந்து அழைக்கவில்லையா? என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications