Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் 'தங்க மகன்' அபினவ் பிந்த்ரா!

Subscribe to Oneindia Tamil

Abhinav Bindra
சென்னை: 28 ஆண்டு கால தங்க வறட்சியை போக்கி, இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய உயிர்ப்பு கொடுத்து ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளார் அபினவ் பிந்த்ரா.

இந்தியாவில் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான் என்ற மாயையை சமீப காலமாக பல்வேறு பிரிவு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உடைத்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு ஊக்கம்தான் சரிவர கிடைப்பதில்லை.

என்னதான் வெற்றி பெற்றாலும், உலக அளவில் பட்டங்கள் வென்றாலும் அவை, கிரிக்கெட் வீரர்களின் வெற்றிக்கு முன்பு காணாமல் போய் விடுகிறது. அந்த அளவுக்கு மக்களின் மன நிலையும் இன்னும் மாறாமல் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களின் விருப்பம் பிற விளையாட்டுக்களின் மீதும் உள்ளது என்பதுதான் உண்மை.

லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸாவின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய டென்னிஸுக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது.

தேசிய விளையாட்டான ஹாக்கியோ ஆரம்ப கால பொற்காலத்திற்குப் பின்னர் இப்போது ஓய்ந்து போய்க் கிடக்கிறது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா கலந்துகொள்ள முடியாத அவலநிலை.

செஸ், பேட்மின்டன் என பல விளையாட்டுக்களிலும் இந்தியாவில் திறமையான, சாதனையாளர்கள் இருந்தாலும் அத்தனை பேருக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக புகழ் தேடித் தந்துள்ளார் அபினவ் பிந்த்ரா.

1980ம் ஆண்டு இந்தியா கடைசி முறையாக தங்கம் வாங்கியது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து டேராடூனில் பிறந்தார் பிந்த்ரா. இப்போது அவர் மூலமாகவே இந்தியாவுக்கு மீண்டும் ஒரு ஒலிம்பிக் தங்கம் கிடைத்திருப்பது விந்தையிலும் விந்தையாகும்.

அபினவ் 2000மாவது ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது அவர்தான் வீரர்களிலேயே மிகவும் இளைய வயதுக்காரர் ஆவார். தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்குப் புதுப் பெருமை தேடிக் கொடுத்துள்ளார் இந்த தங்க மகன்.

அபினவின் முத்திரை பயணம் ...

2001ம் ஆண்டு பல்வேறு உலகளாவிய போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் பிந்த்ரா.

2002ம் ஆண்டு நடந்த மான்செஸ்டர் காமன்வெல்த் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜோடிப் பிரிவில் தங்கம் வென்ற பிந்த்ரா, தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில், முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பதக்கம்தான் கிடைக்கவில்லை.

ஜாக்ரெப் நகரில் 2006ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில், பத்து மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் முதலிடம் பிடித்து உலக சாம்பியன் ஆனார். இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு நடந்த மெல்போர்ன் காமென்வெல்த் போட்டியில் ஜோடிப் பிரிவில் பங்கேற்ற பிந்த்ராவின் துப்பாக்கி திடீரென செயல்படாமல் போனது. இதனால் சக வீராங்கனையான அஞ்சலி பகவத்தின் துப்பாக்கியை இரவல் வாங்கி சுட்டு அதில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் பிந்த்ரா.

2001ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்ற பிந்த்ரா, 2001-02ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி விளையாட்டு ரத்னா விருதினைப் பெற்றார்.

துப்பாக்கிச் சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற பிந்த்ரா படிப்பிலும் படு சுட்டி. எம்.பி.ஏ முடித்துள்ள அபினவ், அபினவ் பியூச்சரிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக உள்ளார். சண்டிகரைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் இது.

டேராடூனில் உள்ள புகழ் பெற்ற டூன் ஸ்கூலில் பத்தாவது வகுப்பை முடித்த பின்னர் சண்டிகரில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியில் மேல் படிப்பை முடித்தார்.

தனது மகனின் துப்பாக்கி சுடும் திறமையை அறிந்து அவரது தந்தை தனது அரண்மனை போன்ற சண்டிகர் வீட்டில், தனியாக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான மையத்தை அமைத்துக் கொடுத்து தீவிர பயிற்சி அளித்து வந்தார். கடந்த 12 ஆண்டுகளாக இங்குதான் பிந்த்ரா பயிற்சியில் ஈடுபட்டார். அதற்கு இப்போது தங்கமான பலன் கிடைத்துள்ளது.

சர்வதேச தரத்திலான துப்பாக்கி சுடும் மையமாக இது விளங்குகிறது. பிந்த்ராவுக்காக 7 துப்பாக்கிகள், குண்டுகள், ஜாக்கெட்டுகள் மற்றும் பிற வசதிகளை பிந்த்ராவின் தந்தை செய்து கொடுத்துள்ளார்.

பிந்த்ராவின் தந்தை ஆரம்ப காலத்தில் சென்னையில் வசித்தவர். அந்த வகையில், தமிழகமும், பிந்த்ராவின் தங்க பதக்கத்திற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அபினவ் பிந்த்ராவின் சாதனை சாதாரணமானதல்ல. கடும் பயிற்சி மற்றும் விடாமுயற்சியின் பலனாக விளைந்ததே. கூடவே அதிர்ஷ்டமும் இருந்ததால் அபினவால் இன்று தங்கத்தை வெல்ல முடிந்துள்ளது.

இதேபோன்ற திறமையுள்ள மேலும் பல தங்க மகன்களும், மகள்களும் இந்தியாவில் ஏராளமாக உள்ளனர். அவர்களை சரியான முறையில் கண்டறிந்து ஊக்கம் கொடுத்தால், உலக அரங்கில் தங்கப் பதக்க வரிசையில் அணிவகுத்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் அங்கம் வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+