எம்பிபிஎஸ் கவுன்சிலிங்-ராமதாஸ் புகாருக்கு அரசு மறுப்பு
சென்னை: எம்பிபிஎஸ் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் படிப்புக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்டி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அட்டவணையை இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் அந்த அட்டவணைப்படி கவுன்சிலிங் நடத்தி கல்லூரியில் மாணவர்களை சேர்க்கின்றன.
அதன்படி தமிழகத்தி்ல இந்த ஆண்டு ஜூலை 4 முதல் 8ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பி.இ. கவுன்சிலிங்கிலும் கலந்து கொள்ள விரும்புகின்றனர்.
சிலர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இருந்து வெளியேறி பொறியியல் கல்லூரிகளில் சேர்கின்றனர். இதனால் காலியிடங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் காலி இடங்களுக்கும், புதிதாக அனுமதி பெறப்பட்ட அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும் சேர்த்து 2வது கட்ட கவுன்சிலிங் கடந்த 11ம் தேதி தொடங்கியது.
ஆகஸ்ட் 25 முதல் 28 வரை இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடத்திக் கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. எனினும் மாணவர்களின் நலன் கருதி, உரிய காலத்தில் பாடங்களை தொடங்க 2வது கட்ட கவுன்சிலிங் சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேராத மாணவர்கள் பற்றிய விவரம், ஆகஸ்ட் 25ம் தேதிதான் முடிவாகும். இதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கவுன்சிலிங் நடத்தினால்தான் அரசு இடங்கள் நிறைவடையும்.
கடந்த 2006-07ம் ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்க்க முதல் கட்ட கவுன்சிலிங் 10.7.2006 முதல் 17.7.2006 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட கவுன்சிலிங் 10.8.2006 முதல் 1.9.2006 வரை நடைபெற்றது.
2007-08ம் ஆண்டில் முதல் கட்ட கவுன்சிலிங் 9.7.2007 முதல் 15.7.2007 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட கவுன்சிலிங் 27.8.2007 முதல் 1.9.2007 வரை நடைபெற்றது.
எனவே இந்தாண்டு எம்பிபிஎஸ் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படை உண்மை எதுவும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications