திருமாவுடன் மோதல்-பகுஜனுக்கு தாவும் செல்வப் பெருந்தகை!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து எம்எல்ஏ செல்வப் பெருந்தகை விலகுவார் எனத் தெரிகிறது. அவரை இழுக்க பகுஜன் சமாஜ் கட்சி முயன்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அதன் தலைவர் திருமாவளவனுக்கும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான செல்வப் பெருந்தகைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து செல்வப் பெருந்தகை கட்சியில் இருந்து விலகி உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணையப் போவதாகவும், அக் கட்சியின் தமிழக தலைவராக அவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது செல்வப் பெருந்தகை கூறுகையில்,
விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டக் கூட்டங்களில் என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். கட்சியின் தலைவரான திருமாவளவன் இதனை கண்டிக்கவில்லை. இதன்மூலம் தலைமையின் உடன்பாட்டுடன் தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தெரிகிறது.
என்னை விரும்பாத கட்சியில் நான் எப்படி பணியாற்ற முடியும். எனவே இனிமேல் கட்சியில் தீவிரமாக பணியாற்ற மாட்டேன். அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.
இப்போதைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சியில் சேரும்படி எனக்கு அழைப்பு வந்திருப்பது உண்மை தான். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை. அமைதியான முறையில் அரசியல் பணி மற்றும் சட்டமன்ற பணிகளில் ஈடுபடுவேன் என்றார்.
இந் நிலையில் சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர்கள் பிரபு, உமா ஆகியோர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் செல்வப் பெருந்தகை விலகினால் கட்சியிலும் பிளவு ஏற்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications