பெண் கமிஷனரை திட்டிய எம்எல்ஏ தம்பிகள், 11 கவுன்சிலர்கள் மீது வழக்கு!
நாகர்கோவில்: நாகர்கோயில் நகராட்சி பெண் ஆணையரை ஆபாசமாகப் பேசிய திமுக எம்எல்ஏவின் தம்பிகள் இருவர் உள்பட 11 கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவி செய்துள்ளனர்.
நாகர்கோவில் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் பெரும் குளறுபடிகள் நடந்து வருகின்றன. நகராட்சி ஆணையராக மெகபூபா பொறுப்புக்கு வந்தபிறகு முறையான ஆவணங்கள் இல்லாமல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்படாது என்றார்.
இது தொடர்பாக நாகர்கோவில் தொகுதி ராஜன் எம்எல்ஏவின் தம்பியும், நகராட்சி துணை தலைவருமான சைமன்ராஜ் தலைமையில் 10 கவுன்சிலர்கள் சென்று ஆணையரிடம் தகராறு செய்தனர். அப்போது ராஜன் எம்எல்ஏ-வின் மற்றொரு தம்பியான சந்திரனும் உடன் இருந்தார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கமிஷனரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கவுன்சிலர்கள் சிலர் திட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெகபூபா இது தொடர்பாக குமரி மாவட்ட எஸ்பி கபில்குமாரிடம் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்துமாறு வடசேரி போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். நகராட்சி ஆணையர் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நகராட்சி துணை தலைவர் சைமன்ராஜ் (திமுக), ஜெயசிங் (4-வது வார்டு திமுக), நாகராஜன் (வார்டு 16 அதிமுக), ராம்மோகன்(வார்டு 36 சுயேட்சை), ராமகிருஷ்ணன்(வார்டு 31 திமுக), சிவராஜ்(வார்டு 41 திமுக), சகாயவெனிஸ் (வார்டு 22 காங்கிரஸ்), அருள்ராஜ்(வார்டு 27 திமுக), சுப்பிரமணிய பிள்ளை (வார்டு 13 திமுக), சீனிவாச சங்கர்(வார்டு 12 அதிமுக), மற்றும் ராஜன் எம்எல்ஏவின் மற்றொரு தம்பி சந்திரன் ஆகிய 11 பேர் மீது பிரிவு 147(கூட்டம் கூடுதல்), 294 (பி) (ஆபாசமாக திட்டுதல்), 353 (அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கவுன்சிலர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications