ரெட்டணை துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
சென்னை: விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் கிராம மக்கள் மீது போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிகள் நடந்தன. இப்பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.80 வீதம்கூலி அறிவிக்கப்பட்டது. ஆனால் வேலை குறைவாக நடந்ததால் கூலியும் குறைத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பெண்கள் உள்பட அப்பகுதி மக்கள் 500 பேர் திண்டிவனம் ரெட்டணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த திண்டிவனம் தாசில்தார் கல்யாணம், மயிலம் பிடிஒ இளங்கோ ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பெரிய தச்சூர் போலீஸாருக்கு தாசில்தார் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் ரெட்டணைக்கு வந்தனர். வாகனத்தில் இருந்து இறங்கிய போலீஸார் பெண்கள், மூதாட்டிகள், பொது மக்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் சரமாரியாக தடியடி நடத்தினர்.
பேசிக் கொண்டிருக்கும்போது ஏன் அடிக்கிறீர்கள் என்று ரெட்டணை மார்க்சிஸ்ட் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போலீஸாரிடம் கேட்டார்.
இதையடுத்து அவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து அதிரடிப்படை போலீஸார் அங்கு வந்தனர்.
மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பின்னர் நான்கு ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது நண்பர்களோடு விளையாடி விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் மூர்த்தியின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.
போலீஸாரின் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நீதி விசாரணை
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாஜிஸ்திரேட் மற்றும் திண்டிவனம் ஆர்.டி.ஓ. ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்துவர் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். காயமடைந்த மாணவன் மூர்த்திக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.
ரெட்டணை மக்கள் அமைதி காக்க வேண்டும். விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்ைக எடுக்கப்படும்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன் முதல்வர் கருணாநிதி ரெட்டணைக்கு நேரில் சென்று விசாரிக்குமாறு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கே.வெங்கடபதி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரை அனுப்பி வைத்தார்.
அவர்களுடன் நானும், மாவட்ட எஸ்.பி அமல்ராஜ் ஆகியோரும் ரெட்டணை கிராமத்திற்குச் சென்றோம். அங்கு நடந்த சம்பவம் குறித்து விசாரித்தறிந்து அதுதொடர்பான அறிக்கையை முதல்வருக்கு அனுப்பினோம்.
இந்த அறிக்கையைப் பெற்ற முதல்வர் தற்போது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications