Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு தழுவிய ஸ்டிரைக்: ஆட்டோ-டாக்சிகள் இயங்கவில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தால் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும்பாலான ஆட்டோ, டாக்சிகள் இயங்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

இந்த ஸ்டிரைக்கிற்கு ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசடியூ, யுடியுசி, டியூசிசி ஆகிய இடதுசாரி தொழிற்சங்கள் மற்றும் எச்எம்எஸ், தமிழக அரசு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலை ஆசிரியர் கழகம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட 40 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, பொருளாதார ஏற்றாத் தாழ்வை சரி செய்யாதது, தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தாதது, தொழிலாளர் சட்டங்களை ஒட்டுமொத்தமாக மீறுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறியது, தொழிலாளர் விரோதப் போக்கு அதிகரிப்பது ஆகியவற்றைக் கண்டித்தும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவில் வேலை நிறுத்தம் முழு அளவில் இருந்தது.

விமான சேவைகள் பாதிப்பு:

இந்த வேலை நிறுத்தத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

அரசுக்கு சொந்தமான விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவு மற்றும் சம்பள பிரச்சனைகளுக்காக விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இதையடுத்து டெல்லியிலிருந்து கொல்கத்தாவுக்கான 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், டெக்கான் மற்றும் ஜெட் லைட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதே போல கொல்கத்தா விமான நிலையமும் முற்றிலுமாக முடங்கியது. இதனால் 8,500 பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

விமான அதிகாரிகள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள 127 விமான நிலையங்களைச் சேர்ந்த 16,000 அதிகாரிகள், ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மும்பை விமான நிலையத்தில் மட்டும் 2,000 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தை போலவே வங்கி, இன்ஷூரன்ஸ், ரயில்வே உள்பட அரசு துறை நிறுவன ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

விமான நிலைய பணியில் விமான படை:

விமான நிலையப் பணிகள் முற்றிலும் முடங்கிவிடாமல் தடுக்க நாட்டின் 21 விமான நிலையங்களில் விமானப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழகத்திலும்...:

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் இடதுசாரி தொழிற் சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முழு அளவில் பங்கேற்றனர்.

சென்னையில் அரசுப் பேருந்துகள், ரயில்கள் வழக்ககம் போல இயங்கின.

பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் இயங்கி வருகின்றன. மக்களன் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

திருப்பூரில்...:

திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் ஜவுளி நிறுவனங்கள் இயங்கவில்லை. இங்கு பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில்..:

கன்னியாகுமரியில் வேலைநிறுத்தம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் கேரளாவில் முழு அளவில் வேலைநிறுத்தம் நடந்து வருவதால் அங்கிருந்து ஒரு பேருந்தும் நாகர்கோவில் வரவில்லை. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு எந்தப் பேருந்தும் இயக்கப்படவில்லை.

லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் வாலையாறு எல்லையில் நிறுத்தப்பட்டன. வேலை நிறுத்தம் முடிந்தவுடன் மாலையில் தான் இவை கேரளாவுக்குச் சென்றன.

ஈரோட்டில்..:

ஈரோட்டில் வேலைநிறுத்தம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வழக்கம்போல அரசுப் பேருந்துகள், பிற வாகனங்கள் இயங்கி வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரக்கணக்கானோர் மறியல்:

ஸ்ரீபெரும்புதூரில் இன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இவர்கள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அனைத்துத் தொழிலாளர்களையும் போலீஸார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

கோவையில் ஓரளவு பாதிப்பு:

தொழில் நிறுவனங்கள் நிறைந்த கோவையில் ஓரளவு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. பஞ்சாலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

நகரிலும் ஆட்டோக்கள், டாக்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. தனியார் பேருந்துகளும் முழு அளவில் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கின. இதனால் கோவையில் ஓரளவுக்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

கேரளாவில்...:

கேரளாவில் வேலைநிறுத்தம் முழு அளவில் இருந்தது. மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். பல்வேறு பகுதிகளில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடந்தன.

பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், வேன்கள், டாக்சிகள் ஓடவில்லை. இருப்பினும் அரசு அலுவலகங்கள் ஓரளவு இயங்கின.

மேற்கு வங்கத்தில்...:

மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது. ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆட்டோக்கள், டாக்சிகள், லாரிகள் ஓடவில்லை. பல முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.

டெல்லியில்..:

டெல்லியில் ரயில் போக்குவரத்து சகஜமாக இருந்தது. இருப்பினும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் வராததால் அவை மூடப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+