திருச்செந்தூரில் தொடங்கியது ஆவணி திருவிழா
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்யர் சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டது.
பின்னர் 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் தீபாராதனையும் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷமிட்டனர்.
மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் அம்பாள் சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பத்தாம் நாள் திருவிழாவின்போது முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. வரும் 30ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்தும் திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications