போதை..மாயமான மாப்பிள்ளை-ஏற்க மறுத்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணப்பெண் சுமாராக இருப்பதாக நண்பர்கள் கூறியதால், போதையில் இருந்த மாப்பிள்ளை மாயமானார். ஆனால், போதை தெளிந்து திரும்பி வந்தபோது அவரை ஏற்க மறுத்துவிட்டார் மணப்பெண்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த சவுந்தராஜன் மகன் ஜெகன் என்ற ஜெகதீஷ், ஆட்டோ டிரைவர். இவருக்கும் திண்டிவனத்தைச் சேர்ந்த மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நேற்று காலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பெண் வீட்டார் நேற்று முன்தினம் மாலையே சீர்வரிசையுடன் அண்ணா ஆர்ச் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து பிறகு இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

வரவேற்பு முடிந்ததும் அனைவரும் சாப்பிடச் சென்றுவிட்டனர். மணமகன் ஜெகன் தனது நண்பர்களுக்கு தனியாக மது விருந்து அளித்தார். நள்ளிரவு வெகு நேரம் வரை மணமகனும் நண்பர்களும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே மது அருந்தினர்.

அப்போது நண்பர்களில் ஒருவர், மணப்பெண் அழகாக இல்லை, சுமாராகத்தான் இருக்கிறார் என்று கிண்டலடித்தார். இதைக்கேட்ட மணமகன் ஜெகன், நீ சொல்வது சரிதான் என்று கூறி மது அருந்திய நிலையில் திடீர் என்று மாயமாகிவிட்டார்.

அதிகாலை 4.30 மணிக்கு முகூர்த்த நேரம். மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு மணமேடையில் அமர வைத்தனர். ஆனால் மணமகன் ஜெகனை காணவில்லை. எங்கு தேடியும் ஜெகன் கிடைக்காததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.

இரவு வெளியில் எங்காவது சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம், மருத்துவமனைகளில் விசாரித்து பார்ப்போம் என்று மாப்பிள்ளை வீட்டார் அவர்களை சமாதானம் செய்தனர்.

முகூர்த்த நேரம் முடிந்த பின்னரும் மாப்பிள்ளை வராததால், பெண் வீட்டார் அமைந்தகரை போலீஸில் புகார் செய்தனர். போலீஸாரும், மாப்பிள்ளை வீட்டாரும் பல இடங்களில் ஜெகனைத் தேடினார்கள். பிராட்வே பஸ் நிலையம் அருகே போதை மயக்கத்தில் ஜெகன் உட்கார்ந்து இருந்ததை பார்த்த போலீஸார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரித்தபோது, பெண் எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் அங்கிருந்து சென்று விட்டேன் என்று கூறினார். அவரை உறவினர்களும், போலீசாரும் சமரசம் செய்து அதே பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க திருமண மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு அழைத்து வந்தனர்.

இதுபற்றி தகவல் பெண் வீட்டாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு குடிகார, குழப்ப மன நிலை கொண்ட மாப்பிள்ளையை என்னால் ஏற்க முடியாது என்று மணமகள் மாலா மறுத்துவிட்டார். மாப்பிள்ளை ஜெகன் மண்டபத்துக்கு வருவதற்கு முன் பெண் வீட்டார் தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+