மயக்க மருந்து- ரயில் கொள்ளைக்காரிகள் கைது!
சென்னை: ரயில் பயணிகளிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் தந்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 2 கொள்ளைக்காரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 104 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து ரயில்வே போலீஸ் ஐ.ஜி. உமாகணபதி சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:
முன்பெல்லாம் மயக்க மருந்து கொடுத்து ரயில்களில் கொள்ளையடிப்பது வட மாநிலங்களில் தான் அதிகமாக நடந்து வந்தது. ஆனால் கடந்த சில காலமாக இங்கும் உள்ளூரைச் சேர்ந்த கும்பல் இத்தகைய மயக்க மருந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந் நிலையில் கடந்த 29ந் தேதி சென்னையிலிருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணம் செய்த நீலா என்ற முதிய பெண் திருத்தணியில் மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அவர் அளித்த வாக்குமூலத்தில், ரயிலில் அவருடன் அன்பாக பேசியபடி வந்த 2 பெண்கள் தான் தன்னை மயக்கமாக்கி இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கம்ப்யூட்டர் துணையோடு படம் வரைந்து கொள்ளையர்களை தேடி வந்தோம்.
30ம் தேதி சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் சுசீலா என்ற 75 வயது மூதாட்டியிடம் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பெண்கள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் தான் 2004ம் ஆண்டில் இருந்து ரயில் பயணிகளிடம், குறிப்பாக வயது முதிர்ந்த பெண்களிடம் பரிவாகப் பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்களை கொடுத்து கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திராவைச் சேர்ந்த இவர்களது பெயர் சந்திரா (55) மற்றும் வரலட்சுமி (வயது 60). இவர்களது கூட்டாளியான பாபுவும் (50) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலுக்கு சந்திரா தான் தலைவி
சந்திராவிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 104 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கும்பலுக்கு 13 கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சந்திரா, தான் கொள்ளையடித்த நகை, பணத்தைக் கொண்டு ஆந்திராவில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பங்களாவை கட்டியுள்ளார்.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார் உமாகணபதி சாஸ்திரி.
இந்தக் கொள்ளைப் பெண்களை கைது செய்ததில் ரயில்வே எஸ்.பி. சாரங்கன் மற்றும் தனிப்படை போலீசாரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
ரயில் பயணத்தின்போதோ ரயில் நிலையங்களிலோ சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டாலோ அல்லது தகவல் கிடைத்தாலோ ரயில் காவல் உதவி மையத்திற்கு 99625 00500 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தரலாம்.












Click it and Unblock the Notifications