புலிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது-இலங்கை

விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜனக நானயக்கரா கூறுகையில்,
வவுனியா விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த முல்லைத் தீவில் இருந்து புலிகளின் 2 விமானங்கள் கிளம்பின. அதிகாலை 4 மணியளவில் வவுனியா அருகே அந்த விமானங்கள் பறப்பதை ரேடாரில் கண்டுபிடித்தோம். இதையடுத்து அந்த விமானங்களை சுட்டு வீழ்த்த போர் விமானங்களை அனுப்பினோம்.
அதே நேரத்தில் விமானப் படைத் தளத்தின் மீது சரியாக குண்டு வீச முடியாமல் புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்றன.
முல்லைத் தீவு மீது அந்த விமானங்கள் சென்று கொண்டிருந்தபோது இலங்கை போர் விமானங்கள் தாக்கின. அதில் புலிகளின் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தாக்குதலுக்காக புலிகளின் விமானங்கள் வவுனியா விமான தளத்தை நெருங்கியபோது தரைப் பகுதியில் இருந்தும் புலிகள் ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தினர் என்றார்.
விமான தளம் மீது குண்டுவீச்சு-11 பேர் பலி:
இதற்கிடையே வவுனியாவில் உள்ள விமானப் படை தளத்தின் மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 11 விமானப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ரேடார்களை இயக்கிய 2 இந்தியர்கள் காயம்?:
இதற்கிடையே வவுனியா விமானப் படைத் தளத்தில் இந்தியா வழங்கிய இரு ரேடார்கள் மீதும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்கியதாகவும், இதில் ரேடார்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், அதை இயக்கிக் கொண்டிருந்த 2 இந்திய பொறியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன என புதினம் இணையதளம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications