Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட ஒதுக்கீட்டுக்கு நெருக்கடி-பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இந் நிலையில் கிரீமி லேயரின் பெயராலும், பிற்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை பொதுப் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீ்ர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் இட ஒதுக்கீட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு சட்டரீதியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

பல்வேறு தடைகளை கடந்தபிறகு, இந்த சட்டம் செல்லத்தக்கது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் தெரிவித்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்குப் பிறகும், இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் இச்சட்டத்தை அமல்படுத்தவும், பொதுப் பிரிவினருக்கு இடங்களில் மாற்றம் ஏற்படாத வகையில் அந்நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.

கூடுதல் இடங்களை உருவாக்குவது என்பது சமூகநீதியின் அடிப்படை கோட்பாட்டினை ஒத்து இருக்கவில்லை என்பதால் இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 9 சதவீத இடங்களை மத்திய அரசு ஒதுக்கத் தொடங்கியுள்ளது.

கிரீமி லேயர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தோர்) என்பது உருவாக்கப்பட்டது முதலே நாங்கள் அதை எதிர்த்து வருகிறோம். இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உள்ளபடி, பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு, சமூக மற்றும் கல்விரீதியிலான பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் பாரபட்சம் காட்டக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கிரீமி லேயரை காரணம் காட்டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், அதிக வருவாய் கொண்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கு இடம் தர மறுக்கப்படுவதால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன.

இந்த காலியிடங்களில், பொதுப்பிரிவு மாணவர்களை சேர்த்துக் கொள்ள தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை. மூன்றில் ஒரு பங்கு (9 சதவீதம்), அதுவும் கிரீமி லேயர்-பிரிவினரை தவிர்த்து சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதில், கிரீமி லேயர் பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு, ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உயர்த்தி நிர்ணயித்ததும் கூட கணக்கில் கொள்ளப்படவில்லை.

மேற்கண்ட விஷயங்கள், இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே கெடுத்து, காலி இடங்கள் ஏற்படுவதற்கே வழிவகுத்துள்ளது.

இந்த காலியிடங்கள், பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டால் தங்களுக்கான இடஒதுக்கீடு உரிமைக்கே பெரும் பின்னடைவு ஏற்படுமோ என்று இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த பிரச்சினை, சட்டப்படி தீர்க்கப்படவேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், திருப்தி அளிக்கும் வகையிலும் கிரீமி லேயர் கோட்பாட்டை கையாளப்பட்டாலே ஒழிய, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் நோக்கம் முழுவதுமாக நிறைவேறாது.

எனவே, சமூகநீதி நிலைநாட்டப்படும் வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இந் நிலையில் திராவிட இயக்க தலைவர்களான சர். பி.டி. தியாகராயர், டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரின் தபால் தலைகள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் பேசிய முதல்வர் கருணாநிதி,

இன்று காலையில் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி எனக்கு தொலைபேசி செய்தார். என்னவென்று கேட்டேன். பரபரப்பாகச் சொன்னார். இன்று மாலையில் விழாவிற்குச் செல்கிறீர்களே, ஒன்று தெரியுமல்லவா உங்களுக்கு என்று கேட்டார். என்னவென்று கேட்டேன்.

இப்போது உச்ச நீதிமன்றத்திலே வந்துள்ள தீர்ப்பை நினைவுபடுத்தி வேதனையோடு என்னிடத்திலே குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு கோட்டாவை 27 சதவீதம் முழுமையாக நிரப்ப முடியாவிட்டால் காலியாக உள்ள அந்த இடங்களையெல்லாம் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போய் விடலாம் என்று உச்ச நீதிமன்றத்திலே தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

நன்மையிலே நஞ்சு கலந்ததைப் போல இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. நாம் தீர்ப்பளித்தவர்களை குறை கூறவோ- தீர்ப்பளித்த அந்த மன்றத்தைக் குறை கூறவோ முற்படவில்லை.

அதைப்பற்றி வாதிடுகின்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?. ஆள் இல்லாவிட்டால் என்ன செய்வது? 'கேரி ஓவர்' என்று ஒன்றிருக்கிறதே, அதை மறந்து விட்டீர்களா?. ஆள் இல்லை என்றால், அடுத்த ஆண்டு வரட்டுமே, அதுவரை பொறுத்திருக்கலாமே என்பது அவர்களுடைய வாதம்.

என்னுடைய வாதம், இப்போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கும்போது, இடம் காலியாக இருந்து, அதற்கு ஆட்கள் கிடைக்காவிட்டால் 'கேரி ஓவர்' என்ற பெயரில் காத்திருக்கிறோமே. அதையே இதிலும் கடை பிடிக்கலாமே.

இதைத் தான் நான் பிரதமருக்கு இன்று எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

இதற்கு நல்ல பதில் கிடைக்கும். நல்ல விளைவு ஏற்படும். நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இடஒதுக்கீடு எந்தத் தாத்பரியத்தின் அடிப்படையிலே தொடங்கப்பட்டதோ, அந்தத் தாத்பரியத்தின் முனையை முறிக்கின்ற அளவிற்கு இப்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியிலேயிருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மிக முக்கியமாக இந்த 27 சதவிகிதம் நிரப்பப்படாவிட்டால் அதை பொதுத் தொகுதிக்கு அனுப்பிவிடலாம் என்ற அவசர முடிவு, அவசர முடிவாக ஆகிவிடும் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

நாம் நம்முடைய உரிமைகளை இழந்து விடக் கூடாது. உரிமைகள் நமக்காக அல்ல, நம்முடைய சந்ததிக்காக, நம்முடைய மக்களுக்காக, தமிழகத்தின் எதிர்காலத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்தவர்கள் நாம்.

சமுதாயத்துக்கு வழிகாட்டிய மகான்கள் முன்னிலையில், நாம் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுகிறேன்.

இப்போது ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியை சட்ட ரீதியாக எப்படி நீங்கள் தீர்க்க வேண்டுமோ அப்படி தீர்ப்பதற்கு முயற்சி எடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+