போபர்ஸ்-சிபிஐ வசம் குவாட்ரோச்சி ஆவணங்கள்
டெல்லி: போபர்ஸ் ஊழல் வழக்கில், இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி தொடர்பான சில ஆவணங்களை பிரதமர் அலுவலகம் கேட்பதாகவும், எனவே அதனை திரும்பத் தர வேண்டும் என்றும் கோரிய சிபிஐயின் கோரிக்கையை ஏற்று அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திற்குச் சொந்தமானவை. எனவே தற்போது அவற்றை பிரதமர் அலுவலகம் திரும்பக் கேட்கிறது. எனவே இந்த ஆவணங்களைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதி சஞ்சீவ் ஜெயின், வழக்கை முடிக்க இந்த ஆவணங்கள் தேவையில்லை என்ற உத்தரவாதத்ைத சிபிஐ கொடுத்த பின்னர் இவற்றை திரும்பப் பெறலாம் என உத்தரவிட்டார்.
குவாட்ரோச்சி தொடர்பான ஆவணங்களை பிரதமர் அலுவலகம் திரும்பக் கேட்பதாக கூறி கோர்ட் மூலம் அதை சிபிஐ திரும்பப் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே அர்ஜென்டினாவில் பிடிபட்ட குவாட்ரோச்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ தோல்வியைத் தழுவியது என்பது நினைவிருக்கலாம்..
போபர்ஸ் ஊழல் வழக்கில், ஏற்கனவே குவாட்ரோச்சி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கடந்த 80களிலிருந்து இந்த வழக்கில் விசாரணை முடங்கிக் கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications