நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு-ராமதாஸ் கோரிக்கை

அவர் கூறியதாவது: திமுகவுக்கு 96 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை இல்லாத அவர்கள் தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி செய்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது.
திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு இந்த பிரச்சனையை எழுப்பியதும் முதலமைச்சர் கருணாநிதி ஆவேசப்பட்டு பேசியிருக்கிறார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸூசுக்கு இடம் கொடுக்க வேண்டும். அதே போல் புதுச்சேரி அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதை நீண்டகாலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள 49 நீதிபதி பணியிடங்களில் 45 நீதிபதிகள்தான் உள்ளனர். இதில், முற்பட்ட வகுப்பினர் 12 பேரும், பிற்படுத்தப்பட்டோர் 21 பேரும், தாழ்த்தப்பட்டோர் 8 பேரும் உள்ளனர். மிகவும் பிற்பட்டோர், முஸ்லிம் சமூகத்தில் தலா 2 பேர் மட்டுமே உள்ளனர். கனிசமான மக்கள் தொகை கொண்ட மிகவும் பிற்பட்டோருக்கு உரிய பிரதி நிதித்ததுவம் வழங்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது.
கூடுதலாக 15 நீதிபதி பணியிடங்களை உருவாக்கி மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 60ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தலைமை நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த ஆணையம் அமைக்கப்படவில்லை.
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று வெங்கடாச்சலய்யா கமிஷனும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெரிவித்துள்ளன. ஆனால் நாடு முழுவதும் உள்ள 610 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 20 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 15 நீதிபதிகளை நியமிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடைபெற வேண்டும்.
மது ஒழிப்பு மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது ஆகியவற்றில் மக்கள் கருத்தை கேட்டறிந்து செயல்படுத்தவதை மகாராஷ்டிர மாநில அரசு நடைமுறைப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலும் கருத்துக் கணிப்பு நடத்தினால் 3 கோடி பெண்கள், 2 கோடி ஆண்கள் மது ஒழிப்புக்கு ஆதரவாகவே கருத்து தெரிவிப்பார்கள்.
கடந்த 1985ல் திமுக சார்பில் நடந்த மாநாடுகளில் மது ஒழிப்புக்கு ஆதரவாக கருணாநிதி பேசி இருக்கிறார். இப்போது மதுவை ஒழிக்கும்படி கூறினால் கள்ளச்சாரயம் பெருகிவிடும், போலி மது பானங்கள் வந்துவிடும் என்று காரணம் சொல்கிறார்கள். கள்ளச்சாரயத்தை ஒழிக்க நாங்கள் யோசனை தருகிறோம்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 500 முதல் 600 மெகாவாட் மின்சாரம்தான் தேவை என்று அரசு மானிய கோரிக்கையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறிப்பிட்டிருந்தார். அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 3500 மெகாவாட் மின்சாரத்தை டீசல் செட் மூலம் உற்பத்தி செய்து தர முடியும் என்று சீமா அமைப்பு கூறியுள்ளது.
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 6.41க்கு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஹரியனாவில் இருந்து ஒரு யூனிட் ரூ.8க்கும் கேரளாவில் இருந்து ஒரு யூனிட் ரூ.10 என்ற அதிக விலைக்கு வாங்கி வருகிறார்கள். இப்படியே போனால் மின்வாரியம் திவால் ஆகிவிடும். இந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ஈழ தமிழர்களுக்காக ஆர்ப்பாட்டம்:
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக 1985ம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் கருணாநிதி பேசியவை நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'தமிழர்களுக்கு ஒரு நாடு; அது தமிழீழ நாடு' என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக 5 உறுதிமொழிகளையும் அவர் அளித்துள்ளார்.
தமிழீழம் மலர ஆதரவு, தமிழர்களுக்கு நிலையான உரிமை, நிரந்தர பாதுகாப்பு, ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவற மாட்டோம், தமிழினத்தை பாதுகாக்க எந்த தியாகத்துக்கும் தயார் என்பதே அவரின் ஐந்து உறுதிமொழிகள். ஆனால் இப்போது ஈழத்தமிழர் பிரச்சனையில் கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். மௌனத்தை கலைத்து மத்திய அரசை அவர் வலியுறுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது. இதை கண்டித்தும், தீர்வு காண வலியுறுத்தியும் சென்னையில் இலங்கைத் தூதரகம் முன்பு வரும் 30ம் தேதி எனது தலைமையில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கு நான் தலைமை தாங்குவேன் என்றார்.












Click it and Unblock the Notifications