விஜயகாந்த்தை எதிர்த்து தேர்தலில் போட்டி - வடிவேலு அதிரடி!

நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு, அதில் வடிவேலு சரமாரியாக தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸில் விஜயகாந்த் மேலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்று வடிவேலு சாட்சியம் அளிக்கவுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் 20க்கும் மேற்பட்ட பைக்குகள், ஆட்டோக்களில் சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் வடிவேலு வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டனர். வீடு மற்றும் அலுவலகம் மீது சரமாரியாக பெரிய பெரிய கற்களை வீசி அடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் வரவேற்பரையில் இருந்த ஷோகேஸ் ஆகியவை உடைந்து சிதறின.
வீட்டுக்குள் இருந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததில் வடிவேலு வீட்டினரில் ஒருவர் காயமடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக வடிவேலு உள்ளிட்டோர் உயிர் தப்பினர்.
இந்த கொலை வெறித் தாக்குலைப் பார்த்து அந்த தெருவே பரபரப்பாகியது. அனைவரும் தெருவில் கூடிவிட்டனர். சிறிது நேர தாக்குதலுக்குப் பின்னர் அந்த கும்பல் வந்த வண்டிகளில் திரும்பி விட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து வடிவேலு கூறுகையில், 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். வந்தவுடன் கற்களை எடுத்து வீட்டின் மீதும், அலுவலகம் மீதும் சரமாரியாக வீசினர். தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தனர். பக்கத்து வீடுகளிலும் போய் கற்கள் விழுந்தன.
என் தலைவனை எதிர்த்து விட்டு வாழ்ந்து விடுவாயா என்று கோபத்துடன் கூறியபடி கற்களால் தாக்கினர்.
'எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போகிறார்?'
நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா?.
ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா?. என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.
நான் காமெடி நடிகன். ரவுடி அல்ல. ஜனங்களை சிரிக்க வைப்பது மட்டுமே எனது தொழில். ஜனங்கள்தான் எனது கடவுள். கல் வீசியவர்களுக்கும், அதைத் தூண்டியவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுப்பார்கள்.
எனக்கு இந்த உலகிலேயே ஒரேயொரு எதிரிதான் இருக்கிறார். வேறு யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அஜீத் படத்தை வைத்திருந்தார்கள் என்று கூறுகிறார்கள். அது திசை திருப்பும் செயல்.
'நானா, விஜயகாந்த்தா பார்த்து விடுவோம்'
விஜயகாந்த்தான் என்னைக் கொலை செய்ய ஆளை அனுப்பியுள்ளார். கடந்த ஒரு வருடமாகவே இதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
மக்கள் செல்வாக்கு என்று நீ கூறுவாயானால் எனக்கும்தான் மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நீ எங்கே வேண்டுமானாலும் போட்டியிடு. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். மக்கள் செல்வாக்கு எனக்கா, விஜயகாந்த்துக்கா என்று பார்த்து விடுவோம்.
நீ ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறாய். நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். அத்தனை கட்சிகளின் ஆதரவுடனும் உன்னை எதிர்த்துப் போட்டியிடுவேன். பார்த்து விடலாம்.
என்னை ஆள் வைத்து அடிச்சீல்ல, உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் உன்னை எதிர்த்துப் போட்டியிடுகிறேன். அதில் நீ ஜெயித்து விட்டால் இந்த தமிழ் சினிமாவை விட்டே விலகி விடுகிறேன்.
ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த அளவுக்கு வன்முறை என்றால், நாளைக்கு பத்து இடத்தில் ஜெயித்து விட்டால் இந்த நாடு என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது என்றார் வடிவேலு கோபத்துடன்.












Click it and Unblock the Notifications