ஸ்பெக்ட்ரம் சர்ச்சை: எந்தவித விசாரணைக்கும் நான் தயார் - அமைச்சர் ராஜா
சென்னை: ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக எந்த முறைகேடும் நடக்கவில்லை. பணம் கைமாறவில்லை. இதுதொடர்பாக நடத்தப்படும் எந்தவித விசாரணைக்கும் நான் தயார் என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 9 மாதங்களாக மத்திய அமைச்சரவையில் காபினட் அமைச்சராக பணியாற்றி வருகிறேன். என் மீது எந்தவொரு தனிப்பட்ட குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மட்டும் என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக கட்டுரை, செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நான் விளக்கம் அனுப்பி வைத்தேன். அவர்களும் அதனை ஓரளவு பிரசுரித்தார்கள்.
ஆனால் சன் டி.வி.யும், தினகரன் பத்திரிகையும் என் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். அதற்கு பதிலளித்தால் அந்த பதிலையும் அவர்கள் வெளியிடவில்லை. திட்டமிட்டே என் மீதும், திமுக மீதும் களங்கம் சுமத்த அந்த நிறுவனங்கள் மாறி மாறி உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது தொடர்பாக என் மீது எந்த புகாரும் இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் எனக்கு எதிராக புகார் கிளம்பியிருப்பதன் பின்னணியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளார் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.
2ஜி அலைவரிசையை பொருத்த வரை சமூக நோக்கத்தில் கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் அந்த அலைவரிசைக்கான உரிமமும் ஒதுக்கீடும் வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
3ஜி அலைவரிசையை பொருத்த வரை அதன் உபயோகிப்பாளர்கள் உயர் வருவாய் பிரிவினர்கள் என்பதால் அந்த அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் உரிமக் கட்டணமாக 9 ஆயிரம் கோடி ரூபாயும், வருவாயில் பங்காக ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும் என மொத்தம் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருடந்தோறும் வருவாயாக கிடைத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் வந்துள்ளது.
தற்போது 4 புதிய நிறுவனங்களுக்கு அலைவரிசை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். ஏல விற்பனை மூலம் ஒரே நேரத்தில் கிடைக்கும் வருவாய் குறைவானதே. ஆனால் தற்போது வருவாயில் பங்கு மூலம் ஆண்டுக்கு ஆண்டு அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து வருகிறது.
எனவே தான் ஏல விற்பனை முறைக்கு பதிலாக வருவாயில் பங்கு அடிப்படையில் 2ஜி அலை வரிசையை ஒதுக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி தகுதி அடிப்படையில் மத்திய அமைச்சரவை, டிராய் மற்றும் டெலி காம் கமிஷன் ஆகியவற்றின் ஒப்புதலோடு விதிமுறைகளின்படியே அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படு கிறது.
இதில் எந்த விதிமீறலோ, சட்ட மீறலோ கிடையாது. குறிப்பிட்ட யாருக்கும் சலுகைகளும் வழங்கப்பட வில்லை. அவ்வாறு வழங்கவும் முடியாது. இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்.
3ஜி அலைவரிசை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப் பட்டு அவை அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு டிசம்பர் மாதம் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கும், தைப்பொங்கல் அன்று சென்னையில் முதலமைச்சர் கருணாநிதியும் இந்த 3ஜி அலை வரிசை சேவையை தொடங்கி வைக்க உள்ளனர் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications