இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும்-அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதை நிறுத்தவும் வலியுறுத்தி நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தி.க, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

அதிமுக, பாஜக, மதிமுக, தேமுதிக ஆகியவை பங்கேற்காத இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டு பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை; நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கனவே கண்ணீர்க் கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள்; சிங்கள ராணுவத்தின் தாக்குதலையும் கண்டு; எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழி பார்த்து நிற்கின்றனர்.

இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டும்.

ஆயுத உதவி செய்வதா?

2. இந்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி தமிழர்களை அழித்திடவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

எம்பிக்கள் பதவி விலகுவர்:

3. ஆயுத உதவியை நிறுத்தவும் இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்.

4. போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறைவிடம், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன் வர வேண்டும்.

மனிதாபிமான உதவி:

5. மனிதாபிமான முறையில் பல்வேறு உதவிகளை வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் வேறு வழிகளில் திருப்பி விடப்படாமல், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஏற்ற வகையில் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீனவர்கள் மீதான தாக்குதல்:

6. வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நடத்துவதும், கருணை துளியுமின்றி சுட்டுக் கொல்வதுமான கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு, மனித நாகரிகமற்ற, மனித உரிமைகளை முழுவதுமாக மீறுகின்ற இச்செயல்களுக்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ. சுதர்சனம், பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், பி.சம்பத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஆர். நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கலி பூங்குன்றன்,

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், எம்எல்ஏ ரவிகுமார், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், லட்சிய திமுக சார்பில் விஜய டி.ராஜேந்தர், ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன்,

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சையத் சத்தார், போட்டி மதிமுக சார்பில் எல்.கணேசன்,செஞ்சி ராமச்சந்திரன், தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைவர் ஜவாஹிருல்லா,

எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், வி.ராஜ்குமார், இந்திய சமூக நீதி இயக்கம் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், தமிழ்நாடு விவசாயிகள் கட்சி பொதுச் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3.30 மணி நேரம் நடந்த கூட்டம்:

மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசினர். கூட்டம் இரவு 8 மணி அளவில் கூட்டம் முடிவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+