இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி-கருணாநிதி

இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இதை 2 வாரங்களில் செய்யாவிட்டால் தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது தமிழ் இன மக்கள் இலங்கையில் படும் தொல்லைகள், கொடிய துன்பங்களில் இருந்து விடுபட்டு-இனப் படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காண்பதற்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் 6 தீர்மானங்களையும் நினைவூட்டி வலியுறுத்திட,
அனைத்துக் கட்சித்தலைவர்களின் ஒப்புதலுடன், வரும் 21ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் சென்னையில் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெறும்.
அந்த அணிவகுப்பில் சென்னையிலே உள்ளவர்கள் மாத்திரமல்லாமல், பிற மாவட்டங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்டப் பேரணியாக அமையும் என்பதால் எல்லா மாவட்டங்களிலுமிருந்து வந்து கலந்து கொண்டு மனிதச் சங்கிலியை பெருமளவில் நடத்திட அனைத்துக் கட்சியினரும்,
குறிப்பாக மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications