Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஜெ': மக்கள் அடையாளம் காண வேண்டும்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் அக்டோபர் 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு நெஞ்சுயர்த்தி வந்திடுக என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:

இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதன் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும், நிலையான அமைதி இலங்கையில் உருவாகிடத் தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்,

இனப்படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, அதற்கான அழைப்பு கடிதங்களை ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் நானே கையெழுத்திட்டு அனுப்பினேன்.

நான்கு கட்சிகள் இக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்கள். அவர்களை தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தந்து, இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையோடு தங்களின் கருத்துக்களை எடுத்து கூறினார்கள். அவர்களுக்கு எல்லாம் அந்த கூட்டத்திலேயே நன்றி தெரிவித்துக் கொண்டேன். இப்போதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்துடைப்பு நாடகமா?:

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அரசின் சார்பாக நான் அழைப்பு விடுத்து கூட்டிய அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தையே கண் துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா புறக்கணிப்பு செய்தார். அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்த அடுத்த கணமே மதிமுக தலைவர் வைகோவும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார். விஜயகாந்தும் வரவில்லை.

ஜெயலலிதா புறக்கணித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர் இனப் படுகொலையை கண்டித்தும், போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு வாரக் காலத்திற்குள் அதாவது அக்டோபர் 28ம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புலிகளுக்கு ஆதரவா?:

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றும், இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்றும்,

இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு இரங்கற்பா தெரிவிக்கும் கருணாநிதி என்றும், என்னைக் கேலி செய்தும், கண்டித்தும், ஜெயலலிதா காரசாரமாக அறிக்கை விடுத்தார்.

இதனைப் பற்றி, காலமெல்லாம் இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தவரும், எனக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு, பல்வேறு ஆபத்துகளைக் கடந்து வவுனியா காடு வரையிலே சென்று திரும்பியவருமான வைகோ கடுகளவு மறுப்போ அல்லது அதுபற்றி கருத்தோ இன்றுவரை தெரிவிக்கவில்லை என்பது தான் எனக்கு ஏற்பட்ட வியப்பு.

பழ.நெடுமாறன் தந்த ஆறுதல்:

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் இந்த அம்மையாரை கண்டித்தும், மறுத்தும் உண்மையை உலகத்திற்கு உணர்த்திடும் அளவிற்கு வெளியிட்ட அறிக்கை தான் இங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை 'பொழுதுபோக்கு கூட்டம்' என்றும், 'கபட நாடகம்' என்றும், 'மோசடி நாடகம்' என்றும் அர்ச்சனை செய்யவும் ஜெயலலிதா தயங்கவில்லை.

அவரும், வேறு சிலரும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல், லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் விஜய டி.ராஜேந்தர் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தன் உடலிலே ஓடுகின்ற தமிழ் ரத்தம் கொதிப்பேறி ஆவேசமாக கண்டனக் குரல் எழுப்பினார்.

அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை!:

அப்போதுகூட நான் அவரை அமைதிப்படுத்தி இதுபோன்ற நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், இந்த கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து அறிக்கை விட்டவர்கள் இலங்கையிலே படுகொலைக்கு ஆளாகின்ற அந்த தமிழர்களை மதிக்காதவர்கள் என்றோ, அவர்களை ஏற்காதவர்கள் என்றோ எண்ணிவிடக் கூடாது.

அவர்களுக்கு என்னைப் பிடிக்காத காரணத்தால் தான் என் அழைப்பை ஏற்று கொள்ளவில்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டும். எனவே, இதை மறுத்துவிட்டு எல்லோரும் ஒற்றுமையாக குரலெழுப்பி இலங்கை தமிழர்களுக்காக, அந்தப் பூமியிலே நிலையான அமைதி தோன்றுவதற்காக பாடுபடுவோம் என்று தான் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அம்மையார் ஜெயலலிதா அனைத்து கட்சி கூட்டம் முடிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு கூட, நம் மீது பொழிகின்ற அர்ச்சனைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கட்சிக்காரர்களே முகம் சுளிக்கின்ற அளவிற்கு, முணுமுணுக்கின்ற அளவிற்கு இலங்கை தமிழர்களை பற்றி தனக்குதான் கவலை என்பதைப் போல வரலாறு தாங்காத வடிகட்டிய பொய்களை அறிக்கைகளாக வடித்தெடுத்து இங்குள்ள பத்திரிகைகளுக்கு பக்கம் பக்கமாக வழங்கி வருகிறார்.

பத்திரிகைகள் நடத்துவோரில், சிலர் தமிழ் இன உணர்வு என்ன விலையென்று கேட்பவர்களாக இருப்பதால் அந்த அறிக்கைகளை தலை வாழை இலையிலே ஊற்றப்பட்ட சுவையான பால் பாயாசமாக எண்ணி அருந்தி மகிழ்கிறார்கள்.

என்ன செய்வது? இலங்கை தமிழ் மக்களின் விமோசனத்திற்காக தமிழ் நிலத்தில் எப்பொழுது இன உணர்வு எழுந்தாலும் அந்த உணர்வு உருவாகும் பொழுதே, அதைக் கெடுப்பதற்கு உலைவைப்போர் சிலர் உருவாகி விடுகிறார்களே, அந்த வரிசையில் வாள் சுழற்றி நம்மோடு வம்புக்கு வருகின்ற ஜெயலலிதாவை இங்குள்ள தமிழர்கள் அல்லவா அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

தமிழ் இனத் தலைவர் பட்டம் நானே சூட்டிக் கொண்டதா?:

தமிழ் இனத் தலைவர் என்று எனக்கு நானே பட்டம் வழங்கி கொண்டதாக அம்மையார் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளுக்காக ஆண்டு தோறும் சிறைக் கைதிகளை விடுவித்தவர் அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.

அவர் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்திற்கு கலைத் துறையை சேர்ந்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதனை கேட்காமல் தன் பெயரையே சூட்டிக் கொண்டவர் அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.

அரசு போக்குவரத்து கழகம் ஒன்றுக்கு ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்ட தன்னலமற்ற தயாபரி அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார். அறிக்கைக்கு அறிக்கை, பேச்சுக்கு பேச்சு, சவாலுக்கு சவால் என்று போனால், அவற்றை அம்மையார் எப்படி அணுகுவார் என்பது நமக்கு தெரியும் என்பதால் அவரிடம் அனுதாபம் காட்டிவிட்டு, இப்போது நாம் அனைத்துக் கட்சி கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் தீர்மானங்களாக, நிறைவேற்றப்பட்டிருக்கிறதே.

மனித சங்கிலி:

அவற்றை நடைமுறைப்படுத்த என்ன வழி, இன்னும் எப்படியெல்லாம் அந்தக் கருத்துகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசின் கவனத்தை இதயப் பூர்வமாக நம் மீது திருப்புவதற்கு என்ன வழிமுறைகள் என்பதையெல்லாம் சிந்திக்கவும், அவற்றை செயல்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். அந்தச் சிந்தனையில் எழுந்ததுதான் அனைத்து கட்சித் தலைவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டு, சென்னையில் வரும் 21ம் தேதி, நாம் நடத்தவுள்ள மனிதச் சங்கிலி அணிவகுப்பு ஆகும்.

நான் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் மாத்திரமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் பங்களிப்பினை இதற்கு வழங்கிட வேண்டும். நமது வேண்டுகோள் அனைத்தும் அனைத்து கட்சிக் கூட்டத் தீர்மானங்களாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவற்றை மத்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமருக்கும், சிறப்பாக சோனியா காந்திக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

பிரதமர் நடவடிக்கை:

இம்மாதம் 6ம் தேதியன்று மயிலை மாங்கொல்லை கூட்டம் நடைபெற்ற அன்றே, காலை 11 மணியளவில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு என்னிடம் பிரதமர் பேசியதோடு, நான் அப்போது அவரிடம் விடுத்த நான்கு கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல், அன்றைய தினம் மாலையிலேயே இலங்கைத் தூதுவரை அழைத்து பேசும்படி ஆணை பிறப்பித்து, அவ்வாறே பேசப்பட்ட அதிகார பூர்வமான செய்தியும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தது.

தமிழ் இனத்தவரின் வேண்டுகோளை பிரதமர் அலட்சியப்படுத்தவில்லை என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்ட காரணத்தால், அந்த நம்பிக்கையை ஆணி வேராகக் கொண்டு மேலும் பல வெற்றி வாய்ப்புகள் தழைக்கும் என்ற எதிர்பார்ப்போடு தான் 14ம் தேதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கையில் அவதியுறும் தமிழ்க் குடும்பங்களை காப்பாற்ற ஆதரவுக் கரம் நீட்டட்டும் இந்தியப் பேரரசு என்பதை அறவழியில் நினைவூட்டவும் தான் இங்கே சென்னையில் மனிதச் சங்கிலி.

மறவாதீர்..! மனிதச் சங்கிலி, 21ம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு வட சென்னையில் சிங்காரவேலர் மாளிகையிலிருந்து தொடங்கி, அண்ணா சாலையை கடந்து தென் சென்னையை தாண்டி தாம்பரத்தையே தாண்டுமோ என்ற அளவிற்கு தமிழர் அணி வகுக்கும் சங்கற்ப சங்கிலி! ஈழத் தமிழரைக் காப்போம் என்ற சங்கற்ப சங்கிலி!- ஆக திகழ வேண்டும்.

அக்டோபர் 21, அந்த உணர்வில் தோய்ந்த உறுதி படைத்த நெஞ்சங்களின் அறப்போர் படை வரிசை. மனிதச் சங்கிலி! மனித நேயச் சங்கிலி, இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவோம், என முழங்கும் முரசுகளின் வரிசை அது, வாரீர்... வாரீர்...

தமிழகம் எங்கணுமிருந்து தடந்தோள் படைத்தோரே, தாய்க்குலமே, கழனியில் உழைப்போரே, கடலில் உழல்வோரே, கலையுலகத்தினரே, கிளம்பிற்றுக் காண், தமிழச் சிங்கக் கூட்டமென தலைநகர் சென்னை நோக்கி வருக!, தமிழர் நாம் என நெஞ்சுயர்த்தியவாறு வந்திடுக சென்னைக்கு!

இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+