கச்சத்தீவு-'இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது'

ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது சிவராஜ் பாட்டீல் இதுகுறித்து கூறுகையில், இந்திய மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது கவலை தருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வழி ஏற்படும் வகையில் இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் 1974ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்கலாம், மீன்பிடி வலைகளை உலர வைக்கலாம். ஆனால் மீன் பிடிக்கக் கூடாது. எனவே கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வழி உண்டா என்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. துரதிர்ஷ்டவசமாக, எங்கு நமது மீனவர்கள் போகக் கூடாதோ அங்கு போய் விடுகிறார்கள். இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அதை நாம் மீற முடியாது.
இருப்பினும் மீனவர் பிரச்சினையை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. நமது மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை சுடுவது குறித்து அந்நாட்டு அரசுடன் பேசியுள்ளோம்.
இலங்கை அரசும் இதுகுறித்து விசாரித்துள்ளது. அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர்கள் தயாரித்துள்ளனர். அதில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய மீனவர்களைப் பாதுகாக்க, இந்திய கடற்படையும் கடலோரக் காவல் படையும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோர ரோந்து, சர்வதேச கடல் எல்லை ரோந்து, வான் ரோந்து, ரேடார் கண்காணிப்பு ஆகியவை இதில் அடங்கும் என்றார் அவர்.
இந்த விவகாரம் மீதான விவாதத்தின்போது சிபிஐ உறுப்பினர் ராஜா பேசுகையில், கச்சத்தீவு பகுதியில், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமை குறித்து 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக முழு அளவில் போர் தொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் கவலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் கவலையும் ஆகும். எனவே இதற்கு எதிராக இந்தியாவே திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும் என்றார்.
அதிமுக உறுப்பினர் மலைச்சாமி பேசுகையில், கச்சத்தீவை நாம் கைப்பற்றியாக வேண்டும். அதுவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்தக் கோணத்தில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றார்.
தமிழர்களை அழிக்க கெமிக்கல் குண்டு-சிவா:
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்து வருகின்றனர். இதை இந்திய நாடாளுமன்றம் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.
தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க கெமிக்கல் குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது.
இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி அக்டோபர் 24ம் தேதி மாபெரும் மனித சங்கிலில் போராட்டம் நடைபெறுகிறது. உலகிலேயே இதுபோல நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு இது மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.
அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் கூறுகையில், இந்தப் பிரச்சினையில் இரு பிரச்சினைகள் அடங்கியுள்ளன. தமிழர்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் தீவிரவாதம்.
முதல் பிரச்சினைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். இரண்டாவது பிரச்சினையை எதிர்க்கிறோம்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை. மாறாக, இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு ஆயுதங்களை வழங்கி தமிழர்களைக் கொல்வதை ஊக்குவித்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications