திண்டுக்கல்-மதுரை தண்டவாளத்தில் அடிக்கடி விரிசல்: பயணிகள் அவதி
மதுரை: மதுரை - திண்டுக்கல் இடையே அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்தப் பிரச்சினையை ரயில்வே நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து கவனிக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் ஏறக்குறைய 7 முறை விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ரயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது.
இன்றும் திண்டுக்கல்லுக்கும், மதுரைக்கும் இடையே 2 இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு வந்து கொண்டு இருந்தது. அம்பாத்துரைக்கும், கொடைரோடுக்கும் இடையே வந்து கொண்டு இருக்கும் போது தண்டவாளத்தில் வித்தியாசமான சத்தத்தை டிரைவர் உணர்ந்தார்.
இதுபற்றி ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு என்ஜீனியர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்த போது விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக சீரமைக்கப்பட்டது.
இதே போல சமயநல்லூருக்கும், சோழவந்தானுக்கும் இடையே இன்று அதிகாலை சிக்னல் போடும் போது சரியாக இயங்கவில்லை. தண்டவாளத்தில் பரிசோதனை செய்த போது ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. அதையும் ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.
இந்த 2 இடங்களில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் மதுரை வந்த அனைத்து ரெயில்களும் 3.30 மணி நேரம் தாமதமாக வந்தது.
அதிகாலையில் 3.10 மணிக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 7 மணிக்கும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் 3.50 மணிக்கு வரவேண்டியது 7.30 மணிக்கும், பொதிகை 4.15 மணிக்கு வரவேண்டியது 8.15 மணிக்கும், நெல்லை எக்ஸ்பிரஸ் 5 மணிக்கு வரவேண்டியது 8.35 மணிக்கும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 6.30 மணிக்கு வரவேண்டியது 8.55 மணிக்கும், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்கு வரவேண்டியது 10 மணிக்கும் மதுரை வந்தன.
வழக்கமாகவே லேட்டாக வரும் சிறப்பு ரயில்கள் இன்று மேலும் தாமதமாக வந்து சேர்ந்தன. அனைத்து ரெயில்களும் 3.30 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.
தொடர்ந்து இப்படி தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதைப் போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் குமுறலுடன் கோருகின்றனர்.












Click it and Unblock the Notifications