இலங்கைக்கு 2000 டன் நிவாரணப் பொருட்கள்
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு சென்னையிலிருந்து 2000 டன் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவற்றை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிவாரண நிதி மற்றும் பொருட்களை சேகரித்து வருகிறது. இதுவரை ரூ. 9 கோடி அளவுக்கு நிதி சேர்ந்துள்ளது. மேலும் நிவாரணப் பொருட்களும் பெருமளவில் குவிந்து வருகிறது.
இதையடுத்து முதல் கட்டமாக 2000 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளுக்கிணங்க நிதி உதவிகளும், நிவாரணப் பொருட்களும் இதுவரையில் ரூ. 10 கோடி அளவுக்கு தமிழக அரசுக்கு வந்து சேர்ந்துள்ளன.
அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களுடன் குளிக்கும் சோப்பு, துவைப்பதற்கான சோப்புகள், பற்பசை ஆகியவையும், வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணியும் ஆயத்த ஆடைகள், துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய துணி வகைகளும் அடங்கிய நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக தனித் தனியே சிப்பங்களாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசினால் முதல் கட்டமாக அளிக்கப்படும் ஏறத்தாழ 2000 டன் எடையுள்ள பொருட்கள் சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரிடம் ஒப்படைக்கப்படும்.
அவரிடமிருந்து இந்த நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இலங்கையில் பாதி்ப்புக்கு ஆளாகியிருக்கும் ஏறத்தாழ 80 ஆயிரம் தமிழர் குடும்பங்களுக்குப் பிரித்து வழங்கப்படும்.
சென்னையிலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதையும், அங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு இவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மேற்கொள்வதையும், கண்காணிக்கும் பொறுப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்றுள்ளது.
இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். அப்போது செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழும அதிகாரி தாமஸ் ரீஸ், வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி பாண்டே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
நல்ல தரமுடன் நிவாரணப் பொருட்கள் இருப்பதாக தாமஸ் ரீஸ் தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 கோடியை தாண்டிய நிதி:
இதற்கிடையே, இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு இதுவரை 9 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 743 ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications