இலங்கை போர் நிறுத்தம்: ஜெ. குரல் கொடுக்க வேண்டும் - ராமதாஸ்
சேலம்: இலங்கையில் ஈழத் தமிழர் நலனுக்காகவும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
வருகிற 13-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே,இந்தியா வருகிறார். இந்த நேரத்தில் வருகிற 10-ந் தேதி தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது.
எனவே இந்த சந்தர்ப்பத்தில், தமிழக சட்டமன்றத்தில் இலங்கையில் நடைபெறும் ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மேலும் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த தீர்மானங்களை பிரதமரிடம் அளித்து, இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தச் சொல்லி தீவிரமாக வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒரே மாதிரியாக குரல்கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு, இலங்கை அரசிடம் அங்கு உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும். இதுவரை மத்திய அரசு அப்படி வலியுறுத்தவில்லை. இந்தியா கூறினால் இலங்கை உடனடியாக போரை நிறுத்திவிடும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஓர் அணியில் திரள வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் கருணாநிதி பின்னால் நிற்கிறது. இது ஒரு நல்ல வாய்ப்பு. இதனை அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜெ.குரல் கொடுக்க வேண்டும்:
இந்த நேரத்தில் ஜெயலலிதா ஈழ தமிழர்களின் நலன்காக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அவருடைய கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வும் அதைத்தான் வலியுறுத்துகிறது. தமிழக பாரதீய ஜனதா கட்சியும் அதைத்தான் கூறி வருகிறது.
அ.தி.மு.க. மட்டும் கருத்து சொல்லாமல் இருக்கிறது. அவர்களும் போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப்புலிகள் பற்றிய அவர்களுடைய கருத்து வேறுபாடாக இருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்டு உள்ள 21/2 லட்சம் ஈழ தமிழர்களின் நலன்காக்க, போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
சென்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாத அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. அதில் கலந்து கொள்ள வேண்டும். அந்த கூட்டத்தில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஒரே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அப்படியில்லையென்றால் தமிழக சட்டசபையில் போர் நிறுத்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications