தொழிலற்ற நகரமான ஓசூர்-ஜெ தாக்கு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வலுவான தொழில் உள்கட்டமைப்பு வசதியுடனும், தொழில்நுட்ப திறனுடைய மனித வளத்துடனும், தொழில் மூலதனத்திற்கு மிகவும் விரும்பத் தகுந்த இடமாக விளங்கியது.
தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவை தங்குதடையின்றி வழங்கப்பட்டன. இதன் காரணமாக தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க தமிழகத்தை நாடி வந்தனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் நகரமாக ஓசூர் விளங்கியது. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்க ஓசூரைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அளவுக்கு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஓசூர் நகரம் விளங்கியது.
அசோக் லேலண்ட், டிவிஎஸ் உட்பட மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஒசூர் நகரத்தில் உள்ளன. இது போன்ற பெரிய தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் செய்து கொடுக்கும் வகையில், ஏராளமான சிறிய தொழிற்சாலைகளும் அங்குள்ளன.
இப்போது ஓசூர் நகரத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது; தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓசூர் நகரத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன.
மேற்படி தொழிற்சாலைகளை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, ஊதிய இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்ததன் காரணமாக அரசின் வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வேளாண் வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மாணவ-மாணவியர், நோயாளிகள், முதியவர்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். திமுக ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலமாக தமிழக மக்கள் நினைக்கின்றார்கள்.
எனவே, தொழில் நகரமான ஓசூரை தொழிலற்ற நகரமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து, அதிமுக கிருஷ்ணகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
பிரேமலதா விஜய்காந்த் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே விலைவாசி உயர்வு மற்றும் மின் வெட்டை கண்டித்து தேமுதிக மகளிர் அணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விஜய்காந்தின் மனைவி பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, தென், வட சென்னை மாவட்ட மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications