ரூ. 1500 கோடி முதலீட்டில் 325 கடைகள் திறக்கும் ஸ்பென்சர்
டெல்லி: ஆர்.பி.ஜி. குழுமத்தைச் சேர்ந்த ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனம் நாடு முழுவதும் 325 புதிய கிளைகளைத் திறக்கவுள்ளது. இதற்காக ரூ. 1500 கோடியை அது முதலீடு செய்யவுள்ளது.
அடுத்த 15 மாதங்களில் இந்த அதிரடிக் கிளைத் திறப்புகளை மேற்கொள்ளவுள்ளது ஸ்பென்சர் ரீடெய்ல். இதன் மூலம் தங்களது வர்த்தகம் 60 சதவீதம் உயரும் எனவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா கூறுகையில், அடுத்த 15 மாதங்களில் அனைத்து வகையான நிறுவனங்களை - மொத்தம் 325 ஸ்டோர்கள் - திறக்கவுள்ளோம். இதற்காக ரூ. 1500 கோடியை முதலீடு செய்யப் போகிறோம்.
குழுமத்திற்குள்ளிருந்தே இதற்கான நிதியை ஒதுக்கவுள்ளோம்.
6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரீடெய்ல் வர்த்தகம் இல்லை. பொருளாதார மந்த நிலைதான் இதற்குக் காரணம்.
இருப்பினும் ஸ்பென்சர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதையும் நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை. தற்போது வேலையில் உள்ளவர்களின் வேலை பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் வருங்காலத்தில் ஆட்கள் எடுப்பதில் சற்று நிதானப் போக்கை கடைப்பிடிக்கவுள்ளோம் என்றார்.
ஸ்பென்சர் ரீடெய்ல் நிறுவனத்திற்கு தற்போது நாடு முழுவதும் 406 கடைகள் உள்ளன. இவற்றில் வர்த்தகம் சரியாக இல்லாததால் 56 கடைகளை கடந்த 3 மாதத்தில் மூடியுள்ளனர். இந்தக் கடைகளின் வருவாய், மொத்த வர்த்தகத்தில் 12 சதவீதமாகும்.
பொருளாதார நெருக்கடியால், ஏராளமான நிறுவனங்கள் தடுமாறிக் கொண்டிருக்கையில், ஆயிரக்கணக்கான கோடிகளை ஸ்பென்சர் நிறுவனம் கொட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications