தமிழ் பேசும் 'பாவத்திற்காக' அழிக்கிறார்கள்-கனிமொழி

விடுதலைச் சிறுத்தைகளின் மாணவர் பிரிவான தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கையில் நடப்பது என்ன? என்பதை மக்களுக்கு விளக்கும் வகையில் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
கூட்டமைப்பின் தலைவர் எழிலன் தலைமையில் 15 மாணவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
அந்த வேனின் இருபுறங்களிலும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையைச் சித்தரிக்கும் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
14 நாட்கள் நடக்கும் இந்த பிரச்சார பயணத்தை திமுக எம்பி கனிமொழி கறுப்பு கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
நம் நாடு நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசுகிறோம். அதே நேரத்தில் ஈழத்தின் உண்மை நிலை என்ன என்று நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன.
இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போர் அறிவிப்பு செய்த பிறகு, பாதிரியார் ஒருவரை அவர் தங்கியிருக்கும் இடத்தை விட்டு செல்லுமாறு அரசு ஆணையிட்டது. அதையடுத்து அந்தப் பாதிரியாரும் மூட்டை, முடிச்சுகளை கட்டிக் கொண்டு போக புறப்பட்டார். அப்போது இரண்டு குழந்தைகள் அங்கு வந்தனர். அவர்களிடம் எனது ஞாபகமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பாதிரியார் 2 பேனாக்களைக் கொடுத்தார்.
அந்தப் பேனாவை பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகள் பாதிரியாரிடமே அவற்றைத் திருப்பிக் கொடுத்தன. நாங்கள் உயிருடன் இருப்போமா அல்லது இருக்க மாட்டோமா என்று தெரியவில்லை. எனவே, வேறு ஊரில் உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பேனாவைக் கொண்டு போய் கொடுங்கள் என்று அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.
எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா?.
தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றார் கனிமொழி.
இந்த நிகழ்ச்சியி்ல் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
மதிமுக உண்ணாவிரதம்:
இதற்கிடையே இலங்கியில் போரை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்தக் கோரி மதிமுக சார்பில் இன்று கரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
கரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பொறுப்புக் குழுத் தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications