பள்ளி மாணவர்களின் ஜாதி மோதல்-விசாரணை!
மதுரை: மதுரை அருகே ஒரு பள்ளியில் ஜாதி துவேஷம் காரணமாக மாணவன் ஒருவனை சக மாணவர்களே தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ளது எழுமலை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் கார்த்திக் (16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு பள்ளியில் கார்த்திக்கை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் சிலர் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும் காம்பஸ் மூலம் கார்த்திக் கண்ணை குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கார்த்திக் புகார் செய்துள்ளார். ஆனால் தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கார்த்திக், மதுரை மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தார்.
அந்த புகாரில் சக மாணவர்கள் தன்னை ஜாதி பாகுபாடு காரணமாகவே தாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சட்டக்கல்லூரியை அடுத்து தமிழகத்தின் சில பகுதியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜாதிரீதியில் வேறுபடுத்திக் கொண்டு தாக்கிக் கொள்ளும் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது பள்ளிகள், கல்லூரி நிர்வாகங்களின் கடமை.












Click it and Unblock the Notifications