மகனை ஆபரேஷன் செய்ய வைத்த மணப்பாறை டாக்டர் தம்பதிக்கு மீண்டும் லைசென்ஸ்?
சென்னை: 15 வயது மகனை பிரசவம் பார்க்க வைத்து பெரும் சர்ச்சையில் சிக்கி, டாக்டர் தொழில் பார்க்க தடை விதிக்கப்பட்ட மணப்பாறை டாக்டர் தம்பதிக்கு மீண்டும் மருத்துவம் பார்க்கும் உரிமம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர், தங்களது மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த பெண்ணுக்கு, தங்களது மகன் திலீபன் ராஜ் (வயது 15- 10ம் வகுப்பு மாணவர்) மூலம் அறுவைச் சிகிச்சை செய்ய வைத்தனர்.
இதை வீடியோவும் எடுத்த அவர்கள், கின்னஸ் உலக சாதனைக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்தத் தகவல் வெளியில் கசிந்ததும் நாடே அதிர்ந்தது. மருத்துவ உலகமும் கொந்தளித்தது. இதைத் தொடர்ந்து டாக்டர் தம்பதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்தது. அவர்களுக்கான லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் டாக்டர் தம்பதி மற்றும் அவர்களது மகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலையாகினர்.
இந்த நிலையில், டாக்டர் தம்பதிகளுக்கு மீண்டும் மருத்துவம் பார்ப்பதற்கான லைசென்ஸை வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான முடிவு நேற்று முன்தினம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இருப்பினும் இதற்கான உத்தரவில் கவுன்சிலின் தலைவர் இன்னும் கையெழுத்திடவில்லை.












Click it and Unblock the Notifications