பிபிஓ ஊழியர்களின் எதிர்ப்பு சரியா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பிபிஓ ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்குவதாகவும் அதற்கு எதிராக விரைவில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்யப் போவதாகவும் தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களுக்கான யூனியன் (UNITES) அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்தடுத்து லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களும் கூட நிதி நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கணிசமான ஊழியர்களை நீக்கி சிக்கனம் பிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான நிறுவனங்களில் கடுமையான சம்பளக் குறைப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் தனது நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு 40 சதவிகிதம் வரையும் விமானிகளுக்கு 25 சதவிகிதம் வரையும் சம்பளக் குறைப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. கிங் பிஷர் 80 சதவிகிதம் வரை சம்பளம் குறைத்தது.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இருக்கிற வேலையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்ற நினைப்பில் ஊழியர்கள் அமைதி காத்து வரும் இந்த சூழலில் புதிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளது தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்களுக்கான யூனியன்.

சர்வதேச அளவில் வலுவாக உள்ள அமைப்பு இது. 163 நாடுகளில் பணியாற்றும் 16 மில்லியன் ஊழியர்களைக் கொண்ட 'யூனியன் நெட்வொர்க் இன்டர்நேஷனல்' என்ற அமைப்பின் ஒரு அங்கம் இந்த யூனியன். இந்தியாவின் ஐஎன்டியூசியின் ஐடி ஊழியர் பிரிவு இது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிபிஓக்கள் தங்கள் பணியாளர்களை ஓவர் டைம் செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகவும். தொழிலாளர் நலச் சட்டத்துக்கு விரோதமாக 8 மணி நேரங்களுக்கு மேல் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல பிபிஓக்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு கூடுதலாக ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்போஸிஸ் கூட தனது ஊழியர்களை 9.15 மணிநேரம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளதையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சில பிபிஓக்களில் 5 பேர் செல்லும் காரில் 7 பேரை திணித்து அனுப்புவதாகவும், கேட்டால் சிக்கன நடவடிக்கை என்று கூறுவதாகவும் குறை கூறியுள்ளனர். இன்னும் சில பிபிஓக்களில் வேலைக்கு உத்தரவாதமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையை சரிப்படுத்துமாறு ஏற்கெனவே ஐடி பணியாளர் யூனியன் நாஸ்காமுக்குத் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து இப்போது, கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு எதிராக கோர்ட்டுக்குப் போக முடிவெடுத்துள்ளது இந்த யூனியன்.

இதுகுறித்து நாஸ்காம் சேர்மன் கணேஷ் நடராஜன் இப்படிக் கூறுகிறார்:

பணியாளர்கள் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறார்கள் என்பதை விட, அவர்களின் உற்பத்தித் திறன் எப்படியுள்ளது என்பதுதான் முக்கியம். இந்தியாவில் ஐடி பணியாளர்கள் சிறப்பாகவே நடத்தப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் குறைந்த நேரம் பணியாற்றினால் போதும் என்று விட்டுவிட முடியாது. இதுகுறித்து நாஸ்காம் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை இப்போது சொல்ல முடியாது, என்றார்.

இன்போஸிஸ் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி மோகன்தாஸ் பய் கூறுகையில், 'கூடுதல் நேரம் பணியாற்றுமாறு ஒரு நிறுவனம் பணியாளர்களைக் கேட்டுக் கொள்வது நடைமுறையில் சகஜம். அதுகூட பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவே. உற்பத்தித் திறன் சிறப்பாக இருந்தால் மட்டுமே, ஒரு நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியும். அதேநேரம் அதற்கேற்ப பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.

இது கடினமான சூழல். இப்போது அனைத்து பணியாளர்களும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பளிப்பதுதான் இந்தத் துறையை தாக்குப் பிடிக்க வைக்கும். இல்லாவிட்டால் இந்தத் துறையே இல்லாமல் போய்விடும்.." என எச்சரித்தார்.

நடைமுறை நிஜம் என்ன?

இந்தியாவில் பிபிஓக்களில் உள்ள பணியாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்போது இன்றைய சூழலுக்கு இரண்டாம் பட்சம்தான். காரணம், உலகமெங்கும் பல பிபிஓக்களில் பணியாளர்கள் குறைப்பு முழுமையாக அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில்தான் இன்னும் அந்தளவு மோசமான நிலை இல்லை. நடப்பு நிலையைக் கணக்கில் கொண்டு, தாங்கல் சார்ந்துள்ள நிறுவனத்தின் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊழியர்களே ஆர்வத்துடன் முன்வர வேண்டும். ஆனால் 5 பேர் செல்லும் காரில் 7 பேர் செல்வதையெல்லாம் ஒரு புகாராக எடுத்துக் கொண்டு கோர்ட்டுக்குப் போவது சிறுபிள்ளைத்தனம்.

தொழில் நன்றாக இருக்கும்போது இருவருக்கு மட்டுமே ஒரு கார்கூட அனுப்பிய அதே பிபிஓதான், இன்று சிக்கனம் பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அது ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை, என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பிபிஓ நிர்வாக இயக்குநர்.

யோசித்துப் பார்த்தால் அதில் நடைமுறை யதார்த்தம் நிறைய இருப்பது புரியும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+