பிரபாகரன் பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய திருமா!
சென்னை: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சென்னையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர் திருமாவளவன்.
இலங்கை தமிழர்படும் இன்னல்குறித்து தமிழக மக்களுக்கு விளக்க கண்காட்சி ஒன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் உயிர் எனும் பெயரில் மெமோரியல் ஹாலில் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கவிஞர் காசி ஆனந்தன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் இடையே திடீரென அங்கு இரண்டு கேக்குகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த கேக்கில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள், மேதகு பிரபாகரன்' என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கேக்கை ஓவியர் வீர சந்தானம் வெட்டினார். திருமாவளவன் உள்பட பலர் அருகே இருந்தனர். கேக் வெட்டும் போது, 'தமிழர் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க' என்று கோஷம் எழுப்பினர்.
இந்த கண்காட்சியில், ஓவியர் தட்சிணாமூர்த்தி, ஓவியர் சந்துரு, டைரக்டர் வி.சி.குகநாதன், புலவர் புலமைபித்தன் உள்பட பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அங்குவந்த ஒரு தம்பதியின் பெண் குழந்தைக்கு, தமிழ் ஓவியா என்று பெயர் சூட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
இலங்கை ராணுவத்தினர் கடந்த பல மாதமாக கிளிநொச்சியை பிடித்து விடுவோம் என்று கூறிவருகிறார்கள். ஆனால், இன்று வரை முடியவில்லை.
விடுதலைப்புலிகள் வீரத்தை உலக சமூகம் பார்த்து வருகிறது. கெடு முடிந்துவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபக்சே, எங்கு முக்காடு போட்டு ஒளிந்து இருக்கிறார் என்றே தெரியவில்லை.
இலங்கையில் நடைபெறும் படுகொலையை சித்தரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் 50 ஓவியர்கள், இந்த ஓவியங்களை தீட்டியுள்ளனர். இலங்கை தமிழர்கள் படும் துயரத்தை படித்தும், கேட்டும் அறிந்துவந்த நமக்கு ஓவியமாகவும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்று வரும் உண்மையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஓவிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் அனைத்தும், புத்தகமாக பின்னர் வெளியிடப்படும், என்றார் திருமாவளவன்.
தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் சென்னையில் கேக் கொண்டாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் மறுப்பு:
ஆனால், பிரபாகரன் பிறந்த நாளை நான் கேக் வெட்டிக் கொண்டாடியதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கில் தமிழ் உயிர் எனும் ஓவியக் கண்காட்சிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரச பயங்கரவாத வன்கொடுமை களை விளக்கும் ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவ்விழாவில் இயக்க தோழர் ஒருவரின் பெண் குழந்தைக்கு தமிழ் ஓவியா என பெயர் சூட்டினேன். அப்போது கேக் ஒன்று வெட்டப்பட்டது.
அந்த வேளையில் திடீரென சில தோழர்கள், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க என்று முழக்கமிட்டனர். அவர்களை உடனடியாக கடிந்து எச்சரித்து அப்புறப்படுத்தினேன். எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றை ஊதி பெருக்கி அரசியலாக்க சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது.
ஓவியக் கண்காட்சி, குழந்தைக்கான பெயர் சூட்டுதல் ஆகியவற்றை திசை திருப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்கிட நடைபெறும் சதி முயற்சிகளை பொருட்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கும், தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பிரபாகரன் பிறந்த நாள்: வக்கீல் கைது:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை உயர்நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய வக்கீல் கைது செய்யப்பட்டார். மேலும் 2 வக்கீல்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கரன், குமார் உள்ளிட்ட 3 பேர் பட்டாசுகளை வெடித்தும், வளாகத்தில் இருந்தோருக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர்நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை சங்கரன் கைது செய்யப்பட்டார். அவரை ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
இதையடுத்து சங்கரன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
குமார் உள்ளிட்ட மற்ற இரு வக்கீல்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications