இந்தியா எங்கள் நண்பன், தடைகளை நீக்க வேண்டும்-பிரபாகரன்
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக் குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.
எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.
இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.
இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.
எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழக உறவுகளுக்கு நன்றி:
காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
எனது அன்பான மக்களே!
சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.
போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்:
அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.
போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.
தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.
எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.
சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.
மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.
சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?:
தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, ராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.
புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது?.
தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?.
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. ராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.
சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.
ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை
பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.
இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, ராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
தொடர்ந்து போராடுவோம்
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு:
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோம் என்றார் பிரபாகரன்.













Click it and Unblock the Notifications