அல்-கொய்தா மீதும் சந்தேகம்: இந்தியா விரையும் எப்பிஐ குழு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமாவும் பிரதமர் மன்மோகன் சி்ங்குடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது இதில் பாகி்ஸ்தானில் உள்ள சில அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது குறித்து பிரதமர் விளக்கினார்.

இதில் அல்-கொய்தாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற அமெரிக்க-இந்திய உளவுப் பிரிவினரின் சந்தேகத்தையும் புஷ்- ஒபாமா- மன்மோகன் சிங் பகிர்ந்து கொண்டனர்.

தீவிரவாதிகளை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு அமெரிக்கா முழு அளவில் துணை நிற்கும் என்றும் புஷ் உறுதியளித்தார். மேலும் எப்பிஐ குழுவை அனுப்புவதாகவும் கூறினார்.

பிரதமருடன் பேசியது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல், விசாரணை குறித்து அதிபர் புஷ் நிர்வாகம் தனக்கு முழு விவரங்களைத் தந்து வருகிறது. இந்த நெருக்கடியான நிலையில் இந்தியாவுக்கு என் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதல்களால் இந்திய ஜனநாயகத்தையோ மக்களின் உறுதியையோ யாரும் குலைத்துவிட முடியாது என்று கூறியுள்ளார்.

இந்தியா கிளம்பிய எப்பிஐ குழு:

இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்த விசாரணையில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்காவின் எப்பிஐ விசாரணைக் குழு லாஸ் ஏஞ்ஜெலஸில் இருந்து மும்பைக்கு கிளம்பிவிட்டது.

இதில் தடயவியல் நிபுணர்கள், பாதுகாப்பு நிபுணர்கள், இன்டர்நெட் ஆராய்ச்சியாளர்களும் அடக்கம்.

இந்தத் தடயவியல் நிபுணர்கள் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாங்கப்பட்ட இடங்கள், பயன்படுத்த வெடி மருந்துகள் உற்பத்தியான இடம் ஆகியவற்றை அடையாளம் காண உதவுவர்.

இ-மெயில்களை அடையாளம் காண...:

இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான், பிரிட்டன், ரஷ்யா, மொரீசியஸ் இடையே ஏராளமான இ-மெயில் பரிவர்த்தனைகளை நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மெயில்களை அடையாளம் காணும் இந்திய உளவுப் பிரிவினரின் முயற்சிகளுக்கு எப்பிஐ குழு உதவவுள்ளது.

அல்கொய்தா-லஷ்கர்-ஜெய்ஷ் கூட்டணி:

இதுவரை கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகியவை காரணமாக இருக்கும் என கருதுவதாக அமெரிக்க உளவுப்பிரிவு மற்றும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த இரு அமைப்புகளையும் அல்-கொய்தா ஒருங்கிணைத்திருக்கலாம் என்கின்றனர்.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் லஷ்கரின் தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அதேசமயம், ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறோம்.

இருப்பினும் காஷ்மீர் தீவிரவாதிகளே இதற்குக் காரணமாக இருக்க முடியும். அல் கொய்தா உதவியிருக்கலாம்.

ஐஎஸ்ஐயும் உதவி:

பாகிஸ்தான் அரசின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பயிற்சி மற்றும் பிற முக்கிய உதவிகளை லஷ்கர் பெற்றிருக்கலாம். ஆனால் தற்போதைய மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றார்.

டைம்ஸ் இதழ் மேலும் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் பல ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய நிலைகளை குறி வைத்து தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.

2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலிலும் லஷ்கர்தான் தொடர்பு கொண்டிருந்தது. ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த தாக்குதலுக்கும் அதுவே காரணம் என இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ குழு ஒன்று விசாரிக்க வந்துள்ளது நினைவிருக்கலாம்.

தாவூத் கும்பலும் உதவியது:

இவர்கள் அனைவருக்கும் மும்பையில் தாக்குதல் நடத்த தாவூத் இப்ராகிமின் ஆட்களும் உதவியிருக்கலாம் என்ற சந்தேகமும் மும்பை தீவிரவாதத் தடுப்பு போலீசாரிடம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+