ஆயுதம் வாங்க மகாராஷ்டிர போலீஸுக்கு மக்கள் மணி ஆர்டர்
நாக்பூர்: மகாராஷ்டிர போலீஸாருக்கு நவீன ஆயுதங்களை வாங்க பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர் நாக்பூர் மக்கள்.
ஆளுக்கு 50 ரூபாயை மணி ஆர்டர் மூலம் அவர்கள் அனுப்ப தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநில ஆளுநருக்கு இந்தப் பணத்தை அவர்கள் அனுப்பி வருகின்றனர்.
நல்ல நவீனத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து 50 ரூபாய் அனுப்பியவர்களில் ஒருவரான சுனில் ஜோக்லேகர் கூறுகையில், நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதல் மூலம், போலீஸாரிடம் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள் இல்லாதது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதலை சமாளிக்கக் கூடிய ஆயுத வல்லமை அவர்களிடம் இல்லை என்பதும் புரிந்து விட்டது.
மாநில போலீஸார் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். ஏ.கே.47 துப்பாக்கியுடன் தீவிரவாதி தாக்கும்போது, சாதாரண 303 அல்லது 7.62 எம்.எம். துப்பாக்கியை வைத்துக் கொண்டு போலீஸாரால் எப்படி சுட முடியும்?
போலீஸாருக்கு நவீன ஆயுதங்களை வாங்க மாநில அரசிடம் பணம் இல்லை என்று நினைக்கிறோம். தகவல் தொடர்பு சாதனத்தை கூட வாங்க அவர்களால் முடியவில்லை. எனேவதான் பணம் அனுப்ப ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.
வக்கீல் சஷாங்க் பான்டே என்பவர் கூறுகையில், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. போலீஸார் நவீன ஆயுதங்களுடன் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
மாநில அரசிடம் போதிய நிதி இல்லை என்று உணர்ந்து அவர்களாகவே இந்த நிதியனுப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர். நானும் எனது பங்குக்குப் பணம் அனுப்பியுள்ளேன்.
அரசுக்கு உதவியாக இருக்கட்டுமே என்பதற்காக எங்களால் முடிந்த தொகையை அனுப்பி வைத்து வருகிறோம்.
குறைந்தது 50 ரூபாயையாவது மணி ஆர்டர் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வையுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிக தொகை அனுப்பினாலும் அதையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது அதி நவீன ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகளை வெறும் லத்திகளையும், 303 துப்பாக்கிகளையும் மட்டும் வைத்துக் கொண்டு மும்பை போலீஸார் போராடியதை உலகமே பார்த்தது.
தரமான புல்லட் புரூப் உடைகளைக் கூட போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்க மகாராஷ்டிரா அரசால் முடியவில்லை என்பதையும் அனைவரும் வேதனையுடன் பார்த்தனர். இந்த தரமற்ற புல்லட் புரூப் உடை அணிந்து தீவிரவாதிகளை எதிர் கொண்ட 3 முக்கிய அதிகாரிகளையும் மகாராஷ்டிர போலீஸ், தீவிரவாதிகளுக்கு காவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
