தியாகிகளை போற்றும் தீரர் முகாம் திமுக-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியாகிகளை போற்றும் தீரர் முகாம் தி.மு.க. என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

"தேசத் தியாகிகளைப் போற்றும் தீரர் முகாம் திமுக''- இந்த வாசகத்தைத் தெம்பு குறையாமல் உச்சரிக்கும் உரிமை திமுகவுக்கும்- திமுக அரசுக்கும் உண்டு. இதில் தினையளவு குறை கூடச் சொல்ல 'திடீர் தேச பக்தர்களுக்கு'த் தகுதி கிடையாது.

திமுகவில் உள்ள தலைவர்கள், முன்னோடிகள், உன் போன்ற உடன் பிறப்புகளாம் செயல் வீரர்கள் பலருக்கு இந்திய நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற நீண்ட காலத்துச் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வயதும், வாய்ப்பும் இல்லாமற்போயினும்; அக்களத்தில் அரிமா நடைபோட்டு அந்நிய சக்தியை எதிர்த்துப் போராடிய தந்தை பெரியாரின் வழித் தோன்றல்கள் என்பதிலே தனிப் பெருமை பெற்றவர்கள் நாம் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லையென்பேன்.

நாட்டு விடுதலைப்போரில் தியாகம் புரிந்தோருக்கும், நமக்கும் என்ன வந்தது என்று பற்றில்லாப்பட்ட மரமாக நில்லாமலும், அவர்கள் எல்லாம் வேறு கட்சியன்றோ எனத் தெளிவற்ற நிலை கொள்ளாமலும் இன்னும் கொள்கை வேறுபாடு எம்மிடையே உள்ளதே எனப் பழைய கதைகளைச் சொல்லாமலும் என்ன இருந்தாலும், சிறை சென்றும், செக்கு இழுத்தும், அடி உதை பட்டும், அடக்குமுறைகளையேற்றும், அவர்கள் அமைத்த பாதை, உருவாக்கிய உரிமை மாளிகை-அதில் அவர்கள் நிழலும் படாமல், நினைவும் போற்றப்படாமல், நாம், நமது வழியில் மட்டுமே விழியைச் செலுத்தி வாழ்வது என்பது மனச்சாட்சிக்கு உகந்ததல்லவே.

அதனால் திராவிடச் சமுதாய உரிமைகளுக்குப் போராடி இன்று நம் நினைவிலே வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல; இந்த மண்ணை மீட்டுக் கொடுத்த மாவீரர்கள், அவர்தம் வழித் தோன்றல்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே நாம் வாழும் காலம் மட்டுமல்ல; இந்த நானிலத்தில் நன்றி என்ற ஓர் உணர்வு வாழும் காலம் வரையில் அந்த மாவீரர்களை- மனிதச் செல்வங்களை மறக்காதிருக்க வழி காண்போம் என்று நம் மனத்திற்பதிய வைத்து ஆற்றிடும் செயல்தான் சென்னை மாநகராட்சி மன்றம் நம் கைக்கு வந்ததும்; 1959ம் ஆண்டு சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை இந்தியப் பிரதமர் பண்டித நேருவைக் கொண்டு அண்ணா கருதியவாறு திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சி!.

அண்ணன் கண் அசைத்து விட்டால் அவர் தம்பிகளாம் நாம்- அந்த அசைவுக்குரிய அர்த்தத்தைப் புரிந்து கொள்ள மாட்டோமா?- அதனால்தானே அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வேலூர் நகராட்சி சார்பில் எதிர்ப்புக்கிடையே காந்தியடிகள் சிலையைத் திறந்து வைத்தபோது; "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு'' என்ற மணிவாசகத்தை வடித்தெடுத்து நமக்கு வழங்கினார்.

இதோ அண்ணா வழியில் நாம் நடத்திடும் பயணத்தில்; ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இதுவரை ஆற்றியுள்ள அரிய சாதனைகளை அடுக்கிக் காட்டுகிறேன் பார்!.

தென்னாப்பிரிக்காவில் நமது தேசத்தந்தை காந்தியடிகளுடன் இணைந்து போராடி சிறைப்பட்டு; சிறையில் சந்தித்த அடக்குமுறைக் கொடுமையால்- உடல் நலிந்து உயிர் விட்ட தில்லையாடி வள்ளியம்மாள் நினைவு போற்ற- தில்லையாடியில் நினைவு மண்டபம்.

"சிதம்பரனார் செக்கு இழுத்தார்'' என்று வரலாறு கூறப்பட்டதே தவிர; அந்த செக்கு எங்கேயிருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்படவில்லையே எனக் கவலையுற்று; தமிழகத்து சிறைச்சாலைகளில் எல்லாம் தேடி, கடைசியாக கோவை சிறையில் கிடந்த அந்த "செக்கு'' கண்டு பிடிக்கப்பட்டு; சென்னைக்கு கொண்டு வரப்பட்டு; அந்த வரலாற்றுச் சின்னத்தை காணும் பேறு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

1806ம் ஆண்டு வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த் தியாகம் செய்த வீரத் தியாகிகளை நினைவு கூர்ந்து 3 லட்ச ரூபாய் செலவில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை நினைவுச் சின்னம்- அங்கே கட்டபொம்மனின் வாரிசுகள் 204 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டது.

காமராஜர் நினைவிடம்- மூதறிஞர் ராஜாஜி நினைவிடம்- பல லட்ச ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்டன. காந்தி மண்டப வளாகத்தில் 25 லட்ச ரூபாய் செலவில் 13-3-1998 அன்று பெரியவர் பக்தவத்சலம் நினைவிடம் எழுப்பப்பட்டது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. 30 லட்சம் ரூபாய் செலவில் காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மண்டபம், 15 லட்சம் ரூபாய் செலவில் ப.ஜீவானந்தம் மணி மண்டபம், மதுரை திருமங்கலத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் வீரத் தியாகி விசுவநாத தாஸ் நினைவில்லம், நெற்கட்டும் செவல் கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் மாவீரன் பூலித் தேவன் நினைவு மண்டபம்.

நாமக்கல்லில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவில்லம்- சென்னை கோட்டையை ஒட்டி நாமக்கல் கவிஞர் மாளிகை.

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து சட்டமாக இயற்றப்பட்டது- குழந்தைகளுக்கு மூன்று முட்டைகள்- வாழைப்பழம் வழங்க ஆணை.

கன்னியாகுமரி கடற்கரையில் 50 லட்சம் ரூபாய் செலவில் காமராஜர் மணி மண்டபம்.

மதுரை தும்பைப்பட்டியில் 25 லட்சம் ரூபாய் செலவிலே தியாக சிலர் கக்கனுக்கு மணி மண்டபம்.

திருப்பத்தூரில் 20 லட்சம் செலவில் மருது பாண்டியர் நினைவிடம்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகே கவர்னகிரியில் ஒரு கோடி ரூபாய் செலவில் வீரன் சுந்தரலிங்கம் நகர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்- நேதாஜி- தியாகி கக்கன் சிலைகள். தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், "ஜெய்ஹிந்த்'' என்று முழக்கமிட்ட செண்பகராமன் ஆகியோரின் சிலைகள். சென்னையில் விடுதலைப் பொன் விழா நினைவுத் தூண்.

இவை மட்டுமல்ல; விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இந்த அரசின் சார்பில் உதவிகள் வழங்கி வருகிறோம். அவர்களின் நலனுக்காக, விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ வசதி, இலவசப் பேருந்து வசதி, வீடுகள் ஒதுக்கீடு மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட தியாகிகள் 1024 பேர். குடும்ப ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் 2,251 பேர்.

மாநில அரசின் ஓய்வூதியம் பெற்று வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் இறந்தால், இந்த ஓய்வூதியத் தொகையானது, அன்னாரின் மனைவிக்கு- கணவருக்கு உரிய வயதடையாத குழந்தைகளுக்குத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக குறிப்பிடத் தக்க வகையில் சிறப்புற பணியாற்றிய மேலோரின் தியாகத்தை பாராட்டி அவர்களது வாரிசுகளுக்கும் சிறப்பு ஓய்வூதியமானது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித் தோன்றல்கள் 132 பேர்களுக்கும்- வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடியான முதுநிலை வழித் தோன்றல்கள் 7 பேர்களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் தகுதியான வழித் தோன்றல்கள் 80 பேர்களுக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அரசியல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மைய மற்றும் மாநில அரசு ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும்- விதவைகளுக்கும் அவர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்யும் வீடுகளில்- மனைகளில்- அடுக்கு மாடி வீடுகளில் ஒரு சதவிகிதம் வீதம் ஒதுக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் சட்டப்படியான வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விடுதலைப் போராட்ட வீரர் இறந்தால், அவர் தம் ஈமச் சடங்குச் செலவுக்காக- உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. இறந்து போன விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வட்டாட்சியருக்கு குறையாத பதவியில் உள்ள வருவாய்த் துறை அலுவலர் ஒருவரால் அரசு சார்பில் மறைந்தவரின் உடல் மீது மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இவ்வாறு விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள், அவரது வாரிசுதாரர்கள் வாழும்போதும், வாழ்ந்து மறைந்த பிறகும், போற்றப்படுகிறார்கள், புகழப்படுகிறார்கள். இது ஒரு மாநில அரசின் கடமை என்றில்லாமல், இந்த மண்ணைக் காத்த மாவீரர்களுக்கும், அவர்தம் வழித் தோன்றல்களுக்கும் நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதோடு மட்டுமல்லாமல்; மறைந்தும் நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் தியாகச் செம்மல்களை திமுக என்றும் மறவாது என்பதற்கு வரைந்துள்ள கல்வெட்டுக்களும் ஆகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+