கஸாப் என் மகன்தான்-தந்தையின் கண்ணீர் ஒப்புதல்

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பத்து பேரில் ஒன்பது பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர். கஸாப் மட்டுமே பிடிபட்டுள்ளான்.
கஸாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஓகாரா மாவட்டம், பரீத்கோட் கிராமத்தைச் சேர்ந்தவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவனது தந்தை பெயர் அமீர் கஸாப், தாயார் பெயர் நூர் என்றும் தெரிய வந்துள்ளது.
மகன் தீவிரவாதியா-நம்ப முடியாத தந்தை:
இந் நிலையில் பாகிஸ்தானின் டான் இதழுக்கு அமீர் கஸாப் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் தாக்குதல் நடத்தியதாக பிடிபட்ட அஜ்மலின் படத்தை டிவியில் பார்த்து நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம். இதை ஜீரணிக்கவே முடியவிலலை. இதனால் தான் தாக்குதல் நடந்து இத்தனை நாட்களாக என்னிடம் பேசிய நிருபர்களிடம் எல்லாம் அவன் என் மகனே இல்லை என்று கூறி வந்தேன். ஆனால் இப்போது அவன் என் மகன்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
புத்தாடை கிடைக்காத கோபத்தில் ஓடிய கஸாப்:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரம்ஜானுக்கு புத்தாடை எடுத்துத் தருமாறு கேட்டான் கஸாப். ஆனால் என்னால் அதை வாங்கித் தர முடியவில்லை. காரணம் வறுமை. இதனால் கோபம் கொண்டு அவன் வீட்டை விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு அவன் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இப்போதுதான் அவனது முகத்தை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்க்கிறேன் என்று கூறிய அமீர் கஸாப் அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் விட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கஸாப் லாகூருக்குப் போயுள்ளான். அங்கு குற்றவாளிகள் சிலருடன் பரிச்சயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து சில குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளான். பின்னர் ராவல்பிண்டி போயிருந்த போது லஷ்கர் இ தொய்பா அமைப்பு குறித்து தகவல் தெரிந்து அதில் இணைந்துள்ளான்.
அமீர் கஸாப்புக்கு, அஜ்மல் கஸாப் உள்ளிட்ட 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
கஸாப்பை இந்தக் கிராமத்தில், அஸாம், இமான், கமால், கஸாவ் என பல பெயர்கள் சொல்லி அழைக்கின்றனர்.
கண்ணீர்க் கடலில் தாயார்:
அமீர் பேட்டியளித்தபோது, அஜ்மல் கஸாப்பின் இரு சகோதரிகளும், தம்பியும் தந்தை மற்றும் தாய்க்கு அருகில் அமர்ந்தபடி கவலையுடன் காணப்பட்டனர். தாயார் நூர், கண்ணீர் வி்ட்டபடியே அமர்ந்திருந்தார்.
அவரிடம் செய்தியாளர்கள் கஸாப் குறித்து கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. மாறாக கண்ணீரையே உதிர்த்தார்.
அமீர் கஸாப் தொடர்ந்து கூறுகையில், நாங்கள் ஆரம்பத்தில் ஹவேலி லகா என்ற கிராமத்தில் வசித்தோம். சில காலங்களுக்கு முன்புதான் பரீத்கோட் வந்தோம். எங்கள் குடும்பம் ஏழ்மையானது.
பக்கோடா தயாரித்து கிராமம் முழுவதும் சென்று விற்று வருவேன். அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் ஜீவனம் நடத்தி வருகிறோம்.
எனது மூத்த மகன் அப்சல் கஸாப், முன்பு லாகூரில் இருந்தான். இப்போது எங்களுடனேயே இங்கு வந்து விட்டான். வயல் வேலை பார்த்து வருகிறான் என்றார் அமீர்.
பரீத்கோட் கிராமம் மிகவும் கிராமப்புறமானது. நகரத்து வாசனை இங்கு சற்றும் கிடையாது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள்தான்.
இங்கு இரண்டு நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று மாணவியருக்கானது. இன்னொன்று மாணவர்களுக்கானது. இங்குதான் அஜ்மல் கஸாப் படித்துள்ளான். மேல் படிப்பு படிக்க வேண்டுமானால் அருகில் உள்ள தீபால்பூர் என்ற கிராமத்திற்குப் போக வேண்டுமாம்.
அமைதி கிராமத்தில் பதுங்கியிருக்கும் புயல்:
பார்க்க அமைதியாக இருக்கும் இந்த கிராமத்தில்தான் பயங்கரவாதிகள் பலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுவதை நம்பவே முடியாது. ஆனால் அதுதான் உண்மை என்கிறார் இந்தக் கிராமவாசி ஒருவர்.
லஷ்கரின் வேட்டைக்காடு-பரீத்கோட்:
லஷ்கர் அமைப்பு இங்கிருந்துதான் பல இளைஞர்களை தனது தீவிரவாத செயல்களுக்கு தேர்வு செய்கிறதாம். இங்கு வறுமையில் வாடும், படிக்காத இளைஞர்களைப் பிடித்து மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி விடுகிறார்களாம்.
இது தவறு என்று கூறும் கிராமத்தினர், அதைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு உள்ளனர். காரணம், தீவிரவாதிகளால் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற பயம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் லஷ்கர் அமைப்பு தரும் தாராள பணம்.
இந்தக் கிராமத்தைச் சுற்றி எந்தத் தொழிற்சாலையும் இல்லை. சில அரிசி ஆலைகள் உள்ளன. அவ்வளவுதான்.
டான் பேட்டியைத் தொடர்ந்து உலகின் கவனம் தங்கள் மீது திரும்பியதைத் தொடர்ந்து அமீரும் அவரது குடும்பத்தினரும் சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர்ந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போய் விட்டனர். அவர்கள் தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதை அமிரின் உறவினர்கள் கூற மறுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications