கன்னியாகுமரி விபத்து: டிஐஜி மகன் உள்பட 4 பேர் பலி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே நடந்த சாலை விபத்தில் டிஐஜியின் மகன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாகர்கோவில் கோட்டார் நாராயணவீதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மகன் வசந்த் (27). இவருடைய நண்பர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்தது.
இதற்காக நண்பர்களான அரவிந்த்(26), என்ஜீனியர் கோபிநாத்(26), ஸ்ரீகணேஷ்(26), குணசீலன்(23), குமார்(24), சிவபிரசாத்(20) ஆகியோர் சந்தித்தனர். அனைவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள்.
நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் ஓட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் பின்னர் காரில் கன்னியாகுமரிக்கு சென்றனர்.
கன்னியாகுமரியை சுற்றிப் பார்த்து விட்டு நள்ளிரவு 12.30 மணி அளவில் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்தனர். காரை அரவிந்த் ஓட்டினார்.
கார் கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது போது எதிரே கன்னியாகுமரி நோக்கி ஒரு கார் சென்றது. அந்த கார் திருச்சியைச் சேர்ந்ததாகும்.
அதில் திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த கந்தசாமி(55), அவருடைய மகன் மோகன்(24), மனோகரன்(56), இவருடைய மகன் சரவணன்(26) மற்றும் திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தத்தின் மகன் செந்தில்நாதன்(26) ஆகிய 5 பேர் இருந்தனர். அந்த காரை செந்தில்நாதன் ஓட்டினார். இவர்கள் சபரிமலைக்கு சென்றுவிட்டு கன்னியாகுமரியை பார்க்க வந்தனர்.
2 கார்களும் பழத்தோட்டம் சந்திப்பு பகுதியில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 கார்களும் பலத்த சேதம் அடைந்தன. காருக்குள் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்ததும் அருகில் உள்ள பழத்தோட்டம் அரசு விபத்து அவசர சிகிச்சை மையத்தினர் விரைந்து வந்தனர். கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்தினர் வந்து காருக்குள் கிடந்தவர்களை மீட்டு அவசர சிகிச்சை மையத்தினரிடம் ஒப்படைத்தார்கள்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அனைவரையும் அவசர சிகிச்சை மையத்தினர் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் வழியில் அய்யப்ப பக்தர்கள் காரில் இருந்த செந்தில்நாதன்), அரவிந்த், வசந்த், கோபிநாத் ஆகிய 4 பேரும் பரிதாபமாக இறந்தனர். 8 பேர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த அரவிந்த்தின் தந்தை சந்திரமோகன் டிஐஜி ஆவார். குஜராத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.
ஐ.ஏ.எஸ். கனவல் இருந்து வந்தார் அரவிந்த். ஆனால் அது சரிவராததால், ஐபிஎஸ் ஆக ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் தற்போது விபத்தில் பலியாகி விட்டார்.
சொந்த ஊர் பத்நாபபுரம் என்றாலும் கூட, அரவிந்த்தின் குடும்பத்தினர் தற்போது குஜராத்தில் உள்ளனர். திருமணத்திற்காக வந்த இடத்தில் மகன் பலியானது அரவிந்த்தின் பெற்றோரையும், குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.












Click it and Unblock the Notifications