தேமுதிக வேலைவாய்ப்பு திட்டம்: திமுக அரசு தடுக்கிறது!- விஜய்காந்த்
சென்னை: தேமுதிக சார்பில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கை வெகு விரைவில் எட்டுவோம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் இந்த வேலை வாய்ப்பு திட்டத்துக்கு அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேமுதிக சார்பில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் சென்னை மேற்கு அண்ணாநகர் லியோ மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இம்முகாமுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தொடர்ந்து விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
விஜயகாந்த் பேசியதாவது:
தேமுதிக சார்பில் 1 லட்சம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதன்படி சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றனர்.
தற்போது 4ம் கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த முகாம் அமைந்தகரையில் உள்ள ஒரு பள்ளியில் நடப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு அட்வான்ஸ் கொடுக்கும் நேரத்தில் பள்ளி நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது. அந்த அளவுக்கு இந்த அரசு அப்பள்ளியை மிரட்டியுள்ளது. அதற்கு பின் இந்த லியோ பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.
அது மட்டுமில்லாமல் இம்முகாமில் கலந்துகொள்ளும் பெரிய, பெரிய நிறுவனங்களையும் இந்த அரசு மிரட்டுகிறது. இருந்தாலும் என் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக பல நிறுவனங்கள் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்ய வந்துள்ளனர்.
இந்த முகாமிற்கு வந்தவர்கள் எல்லாம் ஏழை, எளியவர்கள்தான். கட்சி பாகுபாடின்றி அனைவரும் வந்துள்ளனர்.
தனி மனிதனாக நான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன். ஆனால் அரசாங்கத்தால் இவ்வாறு தர முடியவில்லை. நான் வேலை தருவதையும் தடுப்பதை பார்க்கும்போது "இதெல்லாம் ஒரு அரசாங்கமா?" என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்த அரசு மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு நல்லது செய்வதே கிடையாது. மாறாக திமுகவை காப்பாற்றுவதற்கு கூட்டணி மட்டுமே குறிக்கோள் என்று செயலாற்றுகிறது.
திமுக தரப்பில் சினிமாவிலிருந்து கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் கனவு காணுகிறார்கள் என்று கூறுகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி நன்றாக கதை வசனம் எழுதுவார். அவர் எழுதுகின்ற கதை வசனத்தில் வேண்டுமானால் கனவு காட்சிகள் வரலாம், ஆனால் நான் கனவு என்றைக்குமே காணமாட்டேன், என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டி:
தேமுதிக சார்பில் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு சுமார் 12 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இன்று நடைபெறும் முகாமில் 380 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
அடுத்த வேலவாய்ப்பு வழங்கும் முகாம் வருகிற 20ந் தேதி சிவகங்கை மாவட்டத்திலும், 21ந் தேதி தேனி மாவட்டத்திலும், 27ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திலும், 28ந் தேதி விருதுநகர் மாவட்டத்திலும் நடைபெறும்.
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கை வெகு விரைவில் எட்டுவோம்.
அமைச்சர் பெரியசாமி இல்லத் திருமணத்தில் முதல்வர் பேசும்போது, இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி பேசியுள்ளார். அதில் இனத் துரோகி என்று கூறியுள்ளார். ஒரு நேரத்தில் நெடுமாறனை பார்த்து இனத் துரோகி என்று கருணாநிதி கூறினார்.
கருணாநிதியின் செயலைப் பார்த்து தான் இலங்கை ராணுவ தளபதி அவ்வாறு (அரசியல் கோமாளி) என்று கூறினார்.
வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி சார்பில் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொண்டு கண்டிப்பாக நான் நடத்தியே தீருவேன். நாங்கள் (தேமுதிக) நல்லது செய்து வருகிறோம். அதனால் அனைத்து மாவட்டத்திலும் தேமுதிக வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications