ரியல் எஸ்ட்டே அதிபரிடம் ரூ. 25 லட்சம் வழிப்பறி-இன்ஸ்பெக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 25 லட்சம் பணத்தை பறித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி 9-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் வாசவன் (48). ரியல் எஸ்டேட் அதிபர்.

சத்தியமங்கலத்தை சேர்ந்த நில புரோக்கர் சத்யராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாசவனிடம், கோவை மேட்டுப்பாளையம் அருகே 4 ஏக்கர் நிலம் உள்ளது.

ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நிலத்தை நில உரிமையாளர் பண நெருக்கடி காரணமாக ரூ. 70 லட்சத்துக்கு விற்க முன் வந்துள்ளார். ரூ.25 லட்சத்துடன் கோவை வந்தால் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நிலத்தை வாங்க வாசவன் கோவை வந்தார். நில புரோக்கர் சத்யராஜ், வாசவனைத் தொடர்பு கொண்டு நீங்கள் கோவில்பாளையத்தில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு ரூ.25 லட்சம் பணத்துடன் வந்து விடுங்கள் என்று கூறினார்.

இதை நம்பிய ரியல் எஸ்டேட் அதிபர் தன்னுடன் வந்த புரோக்கர் ராமச்சந்திரன், டிரைவர் ஆகியோருடன் காரில் அங்கு சென்றார். கோவில்பாளையத்தில் உள்ள குறிப்பிட்ட ஹோட்டலுக்கு சென்று சத்யராஜை பார்த்ததும் காரிலிருந்து இறங்கினர்.

அப்போது அங்கு வந்த ஒரு கால் டாக்சியில் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபால் இருந்தார். அவருடன் சத்தியமங்கலத்தை சேர்ந்த நில புரோக்கர் ஜாகீர் என்பவரும் இருந்தார். காரிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் தனபால், புரோக்கர் சத்யராஜை மிரட்டி விரட்டி விட்டார்.

பின்னர் வாசவன், நில புரோக்கர் ராமச்சந்திரன் மற்றும் கார் டிரைவர் ஆகியோரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி, அவர்கள் 3 பேரையும் தான் வந்த கால் டாக்சியில் ஏற்றி கோவில்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினார்.

வாசவன் வந்த காரில் சூட்கேசில் இருந்த பணம் ரூ.25 லட்சத்தை எடுத்து, தன்னுடன் வந்த புரோக்கர் ஜாகீரிடம் இன்ஸ்பெக்டர் தனபால் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் வாசவன் வந்த காரில் போலீஸ் நிலையத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் தனபால், வாசவனிடம் பெயருக்கு சிறிது நேரம் விசாரணை என்ற பெயரில் பேசிவிட்டு கிளம்பிப் போய்விட்டார்.

பணத்தை பறி கொடுத்த வாசவன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துணை எஸ்பி சண்முகப்பிரியாவிடம் புகார் செய்தார். அதன்பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் வாசவனை அழைத்து விசாரித்தனர். அப்போது, வங்கியிலிருந்து ரூ.25 லட்சம் எடுத்ததற்கான ஆவணங்களை வாசவன் காண்பித்தார்.

இதையடுத்து கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சிவனாண்டி உத்தரவின் பேரில் புறநகர் போலீஸ் எஸ்பி சண்முகவேல் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் இன்ஸ்பெக்டர் தனபால் பணத்தை பறித்துச்சென்றது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தனபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனபால் தங்கியிருந்த வீட்டில் நள்ளிரவில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.4 லட்சம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. மீதி பணம், புரோக்கர் ஜாகீரிடம் இருப்பதாக இன்ஸ்பெக்டர் தனபால் கூறினார்.

இன்ஸ்பெக்டர் தனபாலை கோவை 6-ம் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

நில புரோக்கர்கள் சத்யராஜ், மற்றும் ஜாகீரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜட்டிக்குள் பணம்-சஸ்பெண்ட்:

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு கைதிகளை சோதனையிடுவது வழக்கம். அதன்படி இன்ஸ்பெக்டர் தனபாலை வார்டன் சோதனை போட்டபோது, அவர் அணிந்திருந்த ஜட்டிக்குள் கத்தை, கத்தையாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.90,900 அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனபாலை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சிவனாண்டி உத்தரவிட்டார்.

ரூ.1000 லஞ்சம்-பெண் அதிகாரி கைது:

இதற்கிடையே, திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவி வழங்க ரூ. 1000 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரத்தை அடுத்த புதேரிபண்டை கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலி. இவரது மகள் செல்விக்கு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனையொட்டி திருமண நிதி உதவி கோரி பாஞ்சாலி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை உதவியாளர் சிவகாமி என்பவரிடம் மனு கொடுத்தார். அப்போது ரூ.1,000 லஞ்சம் தந்தால் தான் நிதி உதவி வழங்கப்படும் என்று கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஞ்சாலி இது பற்றி உறவினர் நடராஜனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர் காஞ்சீபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ஜெயபால் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதிகாரி சிவகாமியிடம் அளிக்குமாறு கூறினார். அதன்படி பாஞ்சாலி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று ரூ.1,000 லஞ்ச பணத்தை வழங்கினார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவகாமியை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட சிவகாமி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து சிவகாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+