சர்தாரிக்கு கடும் எதிர்ப்பு - ஷெரீப் அதிபராக பாக். மக்கள் விருப்பம்: சர்வே
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், அதிபர் சர்தாரி மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது தெரிய வந்துள்ளது. அவருக்குப் பதில் நவாஸ் ஷெரீப் அதிபர் பதவியை ஏற்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நவாஸ் ஷெரீப் அதிபர் பதவிக்கு வர வேண்டும் என 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச குடியரசு கழகம் என்ற அமைப்பு இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.
'தவறான பாதையில் போகும் பாக்.'
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 80 சதவீதம் பேர் பாகிஸ்தான் தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
73 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதார நிலை கடந்த ஆண்டை விட மகா மோசமாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
'கிலானி அரசு மகா மோசம்'
76 சதவீதம் பேர் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணி அரசு மகா மோசம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இது 51 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற்போது அரசின் மீதான அதிருப்தி கடுமையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷெரீப் அதிபராக வேண்டும் என 59 சதவீதம் பேரும், சர்தாரியே நீடிக்கலாம் என 19 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். சர்தாரியின் செயல்பாடுகள் மகா மட்டம் என 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர்தான் சர்தாரி சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.
'ஷெரீப்தான் சரியான தலைவர்'
நாட்டின் பிரச்சினைகளை சமாளிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் சரியான நபர் நவாஸ் ஷெரீப்தான் என்று 31 சதவீதம் பேரும், சர்தாரிக்கு ஆதரவாக 8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு 3 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்ப தலைவராக பெனாசிர் பூட்டோ விளங்குகிறார். அவருக்கு 64 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். அடுத்த இடம் ஷெரீப்புக்கு கிடைத்துள்ளது. அவரை 60 சதவீதம் பேர் பிடித்த தலைவர் என்று கூறியுள்ளனர்.
'சர்தாரியைப் பிடிக்கவில்லை'
அதேசமயம், சர்தாரியை எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று 65 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனராம்.











Click it and Unblock the Notifications