'நீ தான் எங்கள் குறி'-காங் எம்பிக்கு மிரட்டல்

.
பழனி மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பியான கார்வேந்தனின் வீடு தாராபுரத்தில் மேற்கு கச்சேரி வீதியில் உள்ளது.
இன்று அதிகாலை சிலர் காங்கிரஸ் கொடிகளை எரித்து இவரது வீட்டுக்குள் வீசிவிட்டு சென்றதாகத் தெரிகிறது. மேலும் அங்கு ஒரு கடிதமும் கிடந்தது.
'ஓம்' என்ற எழுத்துடன் தொடங்கும் அந்த கடிதத்தில், ''சட்டசபையில் 50 ஆண்டு பொன்விழா கண்ட கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறாய். சோனியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்காமல் கருணாநிதிக்கு விருது வழங்குமாறு கேட்டிருக்கிறாய். நீ எவ்வளவு தான் பாதுகாப்புடன் இருந்தாலும் இனி நீதான் எங்களது முதல் குறி'' என்று எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மேற்கு மண்டல ஐஜி சிவனாண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். கார்வேந்தனின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது கார்வேந்தன் சென்னையில் இருந்தார்.
இதையடுத்து, இன்று சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற கார்வேந்தன், டிஜிபி ஜெயினை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.
அதில் என் வீடு தாக்கப்படுவதைப் பற்றியோ, என் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையோ கண்டு நான் கவலைப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி கொடிகள் எரிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கார்வேந்தன் பேட்டி
இது குறித்து கார்வேந்தன் கூறுகையில்,
கடந்த 20ம் தேதி 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடிகள் எரிக்கப்பட்டன. இதனை கண்டித்து நானும் தண்டபாணி எம்எல்ஏவும் 300 காங்கிரஸ் தொண்டர்களுடன் பழனியில் மறியல் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தாராபுரத்தில் உள்ள எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இன்று அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் டாய்லெட் சென்ற நேரத்தில் யாரோ சிலர் காங்கிரஸ் கொடிகளை எரித்து வீட்டுக்கு வீசி எரிந்ததோடு எனக்கு மிரட்டல் கடிதத்தையும் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க இந்த செயலில் யாரோ ஈடுபட்டிருக்கலாம். அல்லது பெரியார் தி.கவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இது நடந்திருக்கலாம். மொத்தத்தில் இது காங்கிரசை குறி வைத்து நடந்ட சம்பவம்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் முதலமைச்சரை சந்தித்து மனு கொடுப்பார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் என்றார்.
கார்வேந்தன் தீவிர வாசன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications