'திமுக காங்கிரஸ்', 'அதிமுக காங்கிரஸ்'- திருமா
சென்னை: காங்கிரசில் 'திமுக காங்கிரஸ்', 'அதிமுக காங்கிரஸ்' என இரண்டு பிரிவுகள் உண்டு. அதில் அதிமுக காங்கிரஸ்' என்னை கைது செய்ய சொல்லி தூண்டி வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரியாரின் 35வது நினைவு நாளையொட்டி நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சியி்ல்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.
திருமாவளவன் பேசுகையில்,
தமிழீழ ஆதரவாளர்களாக இருப்பவர்கள் பெரியாரின் பாசறையில் வளர்ந்தவராகத் தான் இருப்பார்கள். அதில் நானும் ஒருவன். தமிழீழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழீழம் பற்றி பேச தடையே கிடையாது.
ஒரு நேரத்தில் ராஜீவ் காந்தி கூட விடுதலைப் புலிகளை பார்த்து வெறும் 2,000 பொடியன்கள் என்று கூறினார். ஆனால் அந்த 2,000 பொடியன்களை இந்திய ராணுவத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இவர்களை பற்றி பேசினால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைப்பார்கள்.
இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் அடைக்க முடியாது.
பெயில்' இருக்கிறது, பரோல்' இருக்கிறது. இதை எல்லாம் நினைத்தாலே தானாக துணிச்சல் வந்துவிடும். எனது உருவப் பொம்மையை தினமும் காங்கிரஸ் நண்பர்கள் எரிக்கிறார்கள்.
ஏசுநாதர் ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார், ஆனால் நான் தினமும் உயிர்த்தெழுகிறேன்.
காங்கிரசில் 'திமுக காங்கிரஸ்', 'அதிமுக காங்கிரஸ்' என இரண்டு பிரிவுகள் உண்டு. அதில் அதிமுக காங்கிரஸ்' என்னை கைது செய்ய சொல்லி தூண்டி வருகிறது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு நான் பொறுப்பாக முடியாது. அவன் அடிக்க வந்தான் இவன் திருப்பி அடித்தான் அவ்வளவு தான் என்றார் திருமாவளவன்.
கி.வீரமணி பேசுகையில்,
எங்களை கைது செய்ய சொல்லி போராடி வரும் காங்கிரசுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நாங்கள் அனைவரும் ஒரே மேடையில் தான் இருக்கிறோம் எளிதாக கைது செய்யலாம். எல்லோரும் சிறைச்சாலை செல்ல தயார், யாருக்கும் பயம் கிடையாது.
காங்கிரஸ்காரர்கள் ரொம்ப நாட்களாக சிறைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். வேண்டுமானால் அவர்கள் சென்று வரலாம்.
எங்களுக்கு ஒரு ஆசை, புழல் சிறைக்கு சென்றதில்லை. அங்கே சென்றால் அங்கிருக்கும் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.
எங்களையும், முதல்வர் கருணாநிதியையும் பிரிக்க சதி நடக்கிறது. கருணாநிதியே எங்களை தள்ளி வைத்தாலும் அவருக்கு பாதுகாப்பு வளையமாகத்தான் நாங்கள் இருப்போம் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications