'பே கமிஷன்' உபயம்: காருக்கு தாவும் அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கிடுகிடுவென உயரும் நிலையில் அவர்களைக் குறி வைத்து கார் தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளன.
எனவே, கார்கள் வாங்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் பலர் மோட்டார் சைக்கிளை, துடைத்து தூர வைத்து விட்டு கார்களுக்குத் தாவி வருகின்றனர்.
இந்தியாவில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள்தான் கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் இப்போதைய பொருளாதார தேக்கத்தால் நொந்து போயுள்ள நிலையில், தங்கள் கார் விற்பனையை நிமிர்த்த அரசு, பொதுத்துறை ஊழியர்களை நோக்கி கணைகளை வீச ஆரம்பித்துள்ளன. போட்டி போட்டுக் கொண்டு சிறப்புச் சலுகைகளை அள்ளி வழங்குகின்றன.
கார் நிறுவனங்கள் சிறிய கார்களுக்கான விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளன.
பொதுவாக மாருதி நிறுவனம் மாதத்துக்கு 3,000 முதல் 4,000கார்கள் வரை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடம் விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்த சிறப்புத் தள்ளுபடிகள், சலுகைகள் மூலமாக அக்டோபர் மாதத்தில் 10,000 கார்களை விற்றுள்ளது.
எப்போதெல்லாம் சம்பள உயர்வை அரசு அறிவிக்கிறதோ, அதை இந்த நிறுவனங்கள் கவனித்து அதற்கேற்றபடி சலுகைகளை கார் கம்பெனிகள் அமல்படுத்துகின்றன.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 6-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தபோது, இந்தியாவின் சக்கரங்கள் (Wheels of India) என்ற பிரசாரத்தை மாருதி தொடங்கியது.
கார்களை வாங்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை விட கூடுதல் தள்ளுபடியை மத்திய அரசு ஊழியர்களுக்கு மாருதி அறிவித்தது.
உதாரணமாக, இந்த மாதத்தில் மாருதி வேக்னர் கார் விலையில் ரூ.50 ஆயிரம் வரை அரசு ஊழியர்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகை உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் அறிவித்த சலுகைகளால், விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை மாதத்துக்கு 2,500 முதல் 3,500 கார்கள் வரை அதிகம் விற்பனை ஆகின்றன. கடந்த மாதம் நவம்பரில் ஹூண்டாய் நிறுவனம் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை தள்ளுபடி விலையை அறிவித்திருந்தது.
அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வால் இந்தியா முழுவதும் சுமார் 55 லட்சம் பேர் பயனடைகிறார்கள். இவர்களில் பலர் சிறிய கார்களான ஹூண்டாய் மற்றும் மாருதி கார்களின் அடுத்த மாடல் காரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். எனவே வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கார் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்று இந்தக் கம்பெனிகள் எதிர்நோக்கி ஆர்வமாக காத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications