மகன் உறுப்புகள் தானம்: தந்தை எதிர்ப்பு-தாய் ஆதரவு

சேலம் மாவட்டம் ஓமலூரைசே சேர்ந்த இளங்கோவன்-கீதா தம்பதியின் மகன் நாஞ்சில்வளவன் (8). கணவன்-மனைவி இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நாஞ்சில்வளவன், தாய் கீதாவுடன் வசித்து வந்தான். தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
இந் நிலையில் பள்ளிக்கு சென்ற நாஞ்சில்வளவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக தாய் கீதாவுக்கு தகவல் வந்தது.
காயம் அடைந்த சிறுவன் நாஞ்சில்வளவனை பரிசோதித்த டாக்டர்கள், மூளை செயல் இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாவும், இனி காப்பாற்றுவது கடினம் என்றும் கைவிரித்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவனது உறவினர்கள் முடிவு செய்தனர். சிறுவனின் தாய் கீதாவும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற சிறுவன் நாஞ்சில்வளவன் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அதிகாலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான்.
அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிறுவன் நாஞ்சில்வளவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதற்கான நடவடிக்கையில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
இதற்கு வசதியாக, சிறுவனின் பெற்றோரிடம் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் கடிதம் வழங்குமாறு கூறப்பட்டது.
சிறுவனின் தாய் கீதா சம்மதம் தெரிவித்தார். ஆனால், அவரது கணவர் இளங்கோவன் பிரிந்து வாழ்வதால் அவரிடம் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
தானத்திற்கு தந்தை போடும் நிபந்தனை:
ஓமலூரில் உள்ள இளங்கோவனிடம், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தன் மீது போடப்பட்ட 3 வழக்குகளை மனைவி கீதா வாபஸ் பெற்றால்தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவேன் என்று கூறிவிட்டார்.
இதனால், சிறுவன் நாஞ்சில்வளவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து சிறுவன் நாஞ்சில்வளவனின் தாத்தா ராமன் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னால் எனது மகள் கீதாவை, இளங்கோவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணம் முடிந்து ஒரு ஆண்டு வரைதான் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
அதன்பின் எனது மருமகன் இளங்கோவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எனது மகள் கீதாவை கொடுமைப்படுத்தி, கூடுதல் வரதட்சணை பணம் வாங்கி வருமாறு கூறினார்.
இதுகுறித்து நாங்கள் போலீசில் புகார் செய்ததுடன், கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 7 ஆண்டுகளாக எனது மகள் கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாள். அவளுடன் பேரன் நாஞ்சில்வளவன் வசித்து வந்தான்.
இந்த நிலையில் துரதிஷ்டவசமாக நாஞ்சில்வளவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெறுவதாக தகவல் வந்தது. அங்கு சென்ற பிறகுதான், அவன மூளை செயல் இழந்துவிட்டது தெரியவந்தது.
இதனால் அவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம். ஆனால், அதற்கு இளங்கோவனும் ஒப்புதல் தரவேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அதற்கு என்னுடைய மருமகன் மறுப்பதுடன், கோர்ட்டில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்கிறார். எந்த சூழ்நிலையிலும் கோர்ட்டில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற மாட்டேன் என்றார் அவர்.
மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தை மறுத்து வருவதால் வளவனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications