அண்ணா பல்கலைக்கழக எம்.இ. மாணவர் தற்கொலை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்து வந்த உடல் ஊனமுற்ற மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்தவர் சக்திவேலு (25). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.இ. முதலாமாண்டில் சேர்ந்து படித்து வந்தார். உடல் ஊனமுற்றவர்.
நேற்று, பல்கலைக்கழகத்தில் உள்ள முத்தையா ஆடிட்டோரியம் பின்புறம் உள்ள புதுப் பகுதியி்ல் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
உடல் கிடந்த பகுதி யாரும் வராத அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதியாகும். புதர் உள்ள பகுதிக்கு வெளியே உள்ள கோட்டூர்புரம் சூரியா நகரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பகுதி வழியாக வருவது வழக்கம்.
மாணவர் உடல் கிடந்தது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் தெற்கு மண்டல இணை ஆணையர் குணசீலன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிப் போயிருந்தது. அவரது பையில் இருந்த அடையாள அட்டையை வைத்துத்தான் அது சக்திவேலு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் போஸ்ட்மார்ட்டம் முடிந்த பிறகே எதுவும் கூற முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ம் தேதி இரவு முதல் சக்திவேலு காணவில்லை. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹரிடம், சக்திவேலுவுடன் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவர்கள்தெரிவித்தனர். மேலும் பரீட்சையில் சரியாக எழுதாததால் மனம் உடைந்து காணப்பட்டார் சக்திவேலு என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஹாஸ்டல் வார்டன், சக்திவேலுவின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். ஆனால் சக்திவேலு வீட்டுக்கு வரவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கிண்டி பொறியியல் கல்லூரி டீன் சேகர், டிசம்பர் 19ம் தேதி போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில்தான் சக்திவேலு பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் பர்கூருக்குப் போயிருந்தபோது தனது சகோதரர்களிடம் தன்னால் சரியாகப் படிக்க முடியவில்லை என்றும், படிப்பு தனக்குப் புரிபடவில்லை என்றும் கூறியுள்ளார் சக்திவேலு. கணிதத் தேர்வில் வெறும் 36 மதிப்பெண்கள் மட்டுமே தான் எடுத்துள்ளதாகவும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.
சக்திவேலுவின் தந்தை குப்பு செட்டி பர்கூரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications