கந்துவட்டி-ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை
பாளையங்கோட்டை விஸ்வபிராமணர் தெருவை சேர்ந்தவர் கோபால் ஆசாரி (60). இவர் அப்பகுதியில் ஒரு தங்க நகை செய்யும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்
இவருக்கு சாந்தா, ரேவதி என 2 மனைவிகள். இவர்கள் மூலம் பழனி, வெங்கடேஷ், சிவா, முருகன் ஆகிய 4 மகன்களும், அய்யப்பா, செல்வி, மகேஷ்வரி என 3 மகள்களும் உள்ளனர்.
நேற்று மகள்கள் 3 பேரும், மகன் முருகனும் வெளியூர் சென்று விட்டனர். வீட்டில் கோபால் ஆசாரி, சாந்தா, ரேவதி, பழனி, வெங்கடேஷ், சிவா ஆகிய 6 பேரும் இருந்தனர்.
இன்று காலை இவர்கள் வீட்டின் கதவு வெகு நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்து பூச்சி மருந்து வாடை வந்தது. இதனால் கதவின் வழியே பார்த்த போது 6 பேரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுபற்றி பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பிணங்களை மீட்டனர்.
6 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனிடையே வெளியூர் சென்ற 3 மகள்களும், ஒரு மகனும் ஊர் திரும்பினர்.
பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பிணமாக கிடப்பதை பார்த்த அவர்கள் கதறி அழுதனர். கோபால் ஆசாரி குடும்ப தேவைக்காக கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் கடனைக் கட்ட முடியவில்லை.
அந்தக் கும்பல் பணத்தைக் கேட்டு நெருக்கவே, குடும்பத்தோடு கோபால் ஆசாரி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
வீட்டிலிருந்து அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது. அவற்றை எங்களால் அடைக்க முடியவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications