பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டப்படும்: பழ. நெடுமாறன்
சென்னை: சென்னைக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ...
ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய இலங்கை ராணுவ வெறியர்களுக்கு துணை நின்ற பிரதமர் மன்மோகன் சிங் நாளை (8ம் தேதி) சென்னை வருகிறார்.
அன்று காலை 8 மணிக்கு சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் அருகே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கட்சி வேறுபாடு இன்றி தமிழர்கள், அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டாலும் தடையை மீறி கருப்புக் கொடி காட்டுவோம் என்று கூறியுள்ளார்.
9ம் தேதி ஆலோசனை-திருமா:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான இனப் படுகொலையைக் கண்டித்து கடந்த 4 மாதங்களாக தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும், அனைத்து தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்து தமிழீழத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அதையொட்டி தமிழகத்தின் அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் கூடி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஈழத்தில் போரை நிறுத்த இந்திய அரசு உரிய அழுத்தத்தைத் தர வேண்டும் என்று வலியுத்தப்பட்டது.
பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவிற்கு அனுப்பி உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து விட்டு போரை நிறுத்த இந்திய அரசு எந்த முனைப்பும் காட்டாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்,
தமிழகத்தில் கிளர்ந்துள்ள வெகுமக்களின் உணர்வுகளை குவிமய்யப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து பேசியிருப்பதுடன் மேலும் சில தலைவர்களை சந்தித்திட முயன்று வருகிறோம்.
அத்துடன் அதன் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வரும் 9ம் தேதி சென்னையில் கூடி ஈழத் தமிழர்கள் சிக்கலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு செய்கிறது.
தமிழீழ ஆதரவு கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் கூட்டணி வரம்புகளை மீறி ஈழத் தமிழர்களின் மீதான சிங்கள இன வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வகையில் வரும் 10ம் தேதி சென்னையில் கூடி முடிவெடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் நிற்கிறது அனைவரும் ஒருங்கிணைவது தவிர்க்க முடியாதது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் தோழமையோடு சுட்டிக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
அரசு நடவடிக்கை-நல்லகண்ணு கோரிக்கை:
இதற்கிடையே இலங்கை தமிழர்களுக்காக சென்னையி்ல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கிளிநொச்சியை இலங்கை அரசு கைப்பற்றிவிட்டதாக, ராணுவம் கூறுகிறது. அங்கு மக்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படியென்றால், அங்கிருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனரா?. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications