திமுக-அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்: கேப்டன்
திருமங்கலம்: வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று மக்களை திமுகவும் அதிமுகவும் நினைத்து விட்டார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
திருமங்கலம் தேவர் சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று அவர் பேசியதாவது:
ஓட்டுக்காக மற்ற கட்சிக்காரர்கள் பணம் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். நோட்டை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஓட்டை எனக்குப் போடுங்கள்.
அது இவர்கள் வயல்காட்டில் உழுது சம்பாதித்து கொண்டு வந்த பணம் அல்ல. இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். இல்லையென்றால் 5 வருடத்திற்கான செலவை கொடுக்கலாம்.
வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று உங்களை நினைத்து விட்டார்களா?.
அந்தக் கட்சிகளுக்கு பாடம் புகட்டுங்கள். இனி எந்த தேர்தலிலும் அவர்கள் பணம் தரக்கூடாது. இந்த மக்கள் புரட்சி வந்தால் இரு கட்சிகளும் ஓடி விடுவார்கள் என்றார் விஜய்காந்த்.
வென்ற பின் வருவோம்-சரத்குமார்:
அதே போல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து அதன் கட்சி தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ராதிகா ஆகியோர் இறுதியாக கணபதி நகரில் உள்ள வெங்கடேசுவர பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரசாரம் செய்தனர்.
சரத்குமார் பேசுகையில், கடந்த ஒரு வார காலமாக நாங்கள் வீதி, வீதியாக, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தோம். வெற்றி பெற்றவுடன் நன்றி கூற மீண்டும் உங்கள் வீடு தேடி வருவோம்.
எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள். நாங்கள் தமிழகத்தை ஒளிமயமாக மாற்றுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications