பேசாமல் மத்திய அமைச்சராகி விட சிபு சோரன் முடிவு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இடைத் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்து அவமானப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன், மீண்டும் மத்திய அமைச்சராகி விட தீர்மானித்துள்ளாராம்.
முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் சட்டசபை இடைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது இந்திய வரலாற்றிலேயே இது 2வது முறையாகும். முன்பு உ.பியில் ஒரு முதல்வர் இப்படித்தான் பதவியில் இருந்தபோது இடைத் தேர்தலில் தோல்வியுற்றார்.
எம்.எல்.ஏ வாக இல்லாமல் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார் சிபு சோரன்.
இதனால் பேசாமல் மீண்டும் மத்திய அமைச்சர் பதவிக்கு மாறி விட அவர் தீர்மானித்துள்ளாராம். ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து வந்த சிபு சோரன் கொலை வழக்கில் தண்டனை கிடைக்கப் பெற்றதால்தான் அதை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வரானார். இந்த நிலையில் இடைத் தேர்தலில் தோற்றுப் போய் விட்டதால் மீண்டும் மத்திய அமைச்சராகி விட தீர்மானித்துள்ளார்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications